By March 2, 20180 CommentsReport

காலா டீசர்: எகிறும் எதிர்பார்ப்பு..!!

காலா டீசர் இன்று (மார்ச் 1) வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திரின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு நாள் தள்ளிப்போயுள்ளது. இது ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமாய் அமைந்தாலும் அவர்களது எதிர்பார்ப்பு குறைந்துவிடவில்லை. இன்னும் சில மணி நேரங்களில் டீசர் வெளியாகிவிடும் நிலையில் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ள ட்வீட் அந்த எதிர்பார்ப்பில் மேலும் எண்ணெய் ஊற்றுவதாக அமைந்துள்ளது.

‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் – ரஜினி கூட்டணி அமைத்திருக்கும் இந்தப் படத்திலும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கபாலி படத்தைப் போல இந்தப் படத்திலும் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் பாப் பாடகர் யோகி பி இதில் பாடியுள்ளதாக சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், “பிரபல பாடகர் யோகிபியுடன் கூட்டணி அமைத்ததில் மிக்க மகிழ்ச்சி. ‘காலா’ டீசரில் உங்களுடைய பெரும் பங்களிப்பிற்கு நன்றி யோகிபி பிரதர். பிரித்து மேய்ந்துவிட்டீர்கள் ஐயா. நாளை முதல் ‘காலா’ டீசர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக படத்தின் தீம் மியூசிக் எப்படி இருக்க வேண்டுமென சந்தோஷ் நாராயணன் தனது ரசிகர்களிடம் ட்விட்டர் வாயிலாகக் கேட்டிருந்தார். தற்போது வெளியாகவுள்ள டீசரில் தீம் மியூசிக் பற்றியும் அறிந்துகொள்ள முடியும் என்பதால் ரசிகர்கள் டீசர் வெளியீட்டை எதிர்பார்த்துள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*