By March 2, 20180 CommentsReport

மணிரத்னத்துக்கு மறுப்பே கிடையாது..!!

காற்று வெளியிடை திரைப்படத்தின் ரிசல்டுக்குப் பிறகு நடிகை அதிதிக்கு நல்ல வாய்ப்புகள் தமிழில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம்போலவே அதிதியை தமிழ்த் திரையுலகம் மறுத்தது. வாய்ப்புகள் இல்லாததால் ஏற்கனவே பிடித்திருந்த இந்தி திரையுலகத்தை மீண்டும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் அதிதி. ஆனாலும், மணிரத்னம் திரைப்படத்தில் மீண்டும் தலைகாட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

காரணம் சாதாரணமானது. நடிப்பில் தனது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் நடிகர், நடிகைகளை மணிரத்னம் ஒரு படத்தோடு விட்டுவிடுவதில்லை. ஆனால், இப்படி அடுத்தப் படத்திலேயே அதிதியை கமிட் செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. காற்று வெளியிடை படத்துக்குப் பிறகு, மணிரத்னம் இயக்கும் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் ஒப்பந்தமாகியிருக்கும் கதாநாயகிகளில் ஒருவராக அதிதி கமிட் செய்யப்பட்டிருக்கிறார்.

செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதிதியைத் தவிர மற்ற நடிகர்கள் அனைவருமே மணிரத்னத்துக்குப் புதியவர்கள். இந்நிலையில் மணிரத்னம் அடுத்த படத்திலும் நடிப்பதை குறித்து அதிதி ராவ் ஃபர்ஸ்ட் ஸ்பாட் இணையதள பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

“நான் மணிரத்னம் சாரின் ஸ்பெஷல் எனக் கருதுகிறேன். அவர் என்னிடம் இருக்கும் சிறப்பை வெளிக்கொண்டு வருகிறார். மணி சார் இன்னும் அடுத்தடுத்த படங்களுக்காக ஒப்பந்தம் செய்யக் கேட்டாலும் மறுக்காமல் நடித்துக் கொடுப்பேன். அந்த அளவுக்கு அவரை மதிக்கிறேன், நேசிக்கிறேன். அவரின் படங்களில் நடிப்பது என் கனவு. நான் அவரைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருந்தேனோ, அதைவிடப் பன்மடங்கு சிறந்த மனிதராக இருக்கிறார். மொத்தத்தில் ஒரு நடிகையாக என்னை நான் முற்றிலும் அவரிடம் ஒப்படைத்துவிட்டேன். என்னை எப்படியெல்லாம் செதுக்க முடியுமோ, அதை அவர் கட்டாயம் செய்வார். செய்து கொண்டும் இருக்கிறார். இதை எனக்கான ஆசீர்வாதமாகக் கருதுகிறேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*