By March 3, 20180 CommentsReport

களத்தில் இறங்கிய விக்ரம் மகன்..!!

விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 2) துவங்கியுள்ளது.

விக்ரமின் திரைப் பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தவர் இயக்குநர் பாலா. அவரின் சேது படமே விக்ரமை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது. அந்த வகையில் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகவிருக்கும் வர்மா படத்தையும் பாலாவே இயக்குகிறார் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளம் காத்மாண்டு நகரில் துவங்கி நடைபெற்றுவருகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாகப் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.

தேவதாஸ் காதல் கதையை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு திரைக்கதையில் பல புதுமைகளைச் செய்து அர்ஜுன் ரெட்டி என்ற பெயரில் தெலுங்கில் வெளியிட்டனர். மொழிகளைக் கடந்தும் இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் பாலா. விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடிக்க, கதாநாயகிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

நாச்சியார் படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த இவானா நடிப்பார் என பேசப்பட்டுவருகிறது. தனது முதல் படமான நாச்சியாரிலேயே இவானா கர்ப்பிணிப் பெண்ணாகவும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். அர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டேவும் அதில் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்திருந்தார். எனவே இவானா ஒப்பந்தமாக சாத்தியங்கள் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது.

‘E4 என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துவரும் இதற்கு ராஜுமுருகன் வசனம் எழுதுகிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். வெகு விரைவில் படத்தில் நடிக்கவிருக்கும் கதாநாயகி, இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*