By March 3, 20180 CommentsReport

குடும்பத்துடன் ‘ஹோலி’ கொண்டாடிய ரஜினி..!!

நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகையில் நடிகர் ரஜினிகாந்தும் தன்னுடைய குடும்பத்தினரோடு ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடியிருக்கிறார்.

வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஹோலி. இந்தப் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்தியாவில் வட மாநிலங்களில் அதிகமாகக் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை குஜராத் மாநிலத்தில் மட்டும் 5 நாட்கள் கொண்டாடப்படும். ஒவ்வொரு மாநிலங்களிலும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி கொண்டாடி மகிழ்கின்றனர்.

மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே இந்தப் பண்டிகையின் முக்கியக் குறிக்கோளாக இருக்கிறது. மேலும் பனிக்காலத்திற்கு விடை கொடுத்து வெயில் காலத்தை வரவேற்கும் விதமாகவும் இந்தக் கொண்டாட்டம் அமைகிறது. இது போன்றே வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக தமிழ் நாட்டில் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஆனால் அது தற்போது கொண்டாடப்படுவது இல்லை. ‘காமன் கூத்து’ என்ற பெயரில் கூத்துக்கலை நிகழ்வு மட்டுமே நடைபெற்று வருகிறது.

ஹோலிப் பண்டிகையை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடிவருகையில் ரஜினிகாந்த் தன்னுடைய குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். நேற்று நள்ளிரவு ரஜினியின் காலா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. அதனைக் குறிப்பிடும் விதமாகவும் ரஜினியின் மகள் சௌந்தர்யா ஹோலி கொண்டாடத்திற்கான புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதுடன், “ஒரே ஒரு காலா சூப்பர் ஸ்டார் என் அன்பிற்கினிய அப்பாவுடன் ஹோலி கொண்டாடினேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*