By March 3, 20180 CommentsReport

சூப்பர் ஸ்டாராக விஜய் சேதுபதி..!!

தமிழ் சினிமாவுலகில் தொடர்ச்சியாக பல படங்களில் பிஸியாக நடித்துவரும் விஜய் சேதுபதி தற்போது சீதக்காதி படத்தில் நடித்து வருகிறார். இதில் அவரின் கதாபாத்திரம் என்னவென்பது தெரியாமல் இருந்த வேளையில் அதனை தெரிவிக்கும் விதமாக புகைப்படமும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

புதுமையை விரும்பும் நடிகர்களுள் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதி தன்னுடைய ஒவ்வொரு படங்களுக்கும் மாறுபட்ட தோற்றங்களை வெளிப்படுத்திவருகிறார். வளர்ந்துவரும் நடிகர்கள் முதுமையான தோற்றத்தில் நடிக்கத் தயங்குவார்கள். ஆனால் விஜய் சேதுபதி அதை ஆரஞ்சு மிட்டாய் படத்தின் மூலம் தகர்த்தார். அந்தப் படத்திற்குப் பிறகு முதுமையான தோற்றத்தில் சீதக்காதி படத்தில் நடித்துவருகிறார்.

இந்தப் படத்தின் போஸ்டர் வெளியானபோது விஜய் சேதுபதியின் கேரக்டர் எழுத்தாளர் கி.ராஜநாராயணனைப் பிரதிபலிப்பதாகவும், ரகுவரனைப் பிரதிபலிப்பதாகவும் கருத்து தெரிவித்தனர். ஆனால் தற்போது படம் சம்பந்தமான புகைப்படங்கள் வெளியாகியிருப்பதைப் பார்க்கையில் விஜய் சேதுபதி சூப்பர் ஸ்டாராக நடித்திருப்பார் எனத் தெரிகிறது.

சீதக்காதி படத்தின் படப்பிடிப்பு சென்னை குரோம்பேட்டையிலுள்ள வெற்றி திரையரங்கில் படமாக்கப்பட்டுவருகிறது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த விஜய் சேதுபதியின் வயதான தோற்றத்தில் இருக்கும் கட்அவுட்டுக்கு விஜய் சேதுபதி ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து ஆரவாரம் செய்தனர். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார்களின் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்து வருவதால் இதில் விஜய் சேதுபதி சூப்பர் ஸ்டாராக நடித்திருப்பார் எனக் கருத முடிகிறது. அந்தப் புகைப்பம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகின்றன.

விஜய் சேதுபதியின் 25ஆவது படமாக உருவாகும் இதனை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அர்ச்சனா நடிக்கிறார். ரம்யா நம்பீசன், காயத்ரி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நயன்தாராவை சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*