By March 3, 20180 CommentsReport

புகாரை மறுக்கும் சாய் பல்லவி..!!

நாக சவுரியா என்னைப் பற்றித் தவறாகக் கூறியதால் எனக்கே என் மீது சந்தேகம் வந்தது என்று கூறியுள்ளார் நடிகை சாய் பல்லவி.

மலையாளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சாய் பல்லவி. இந்தப் படத்தில் சாய் பல்லவி நடித்த மலர் கதாபாத்திரம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனையடுத்து தெலுங்கில் அவர் நடித்த ‘ஃபிடா’ படமும் வெற்றி பெற்றது. தற்போது விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் ‘கரு’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் சாய் பல்லவியுடன் இணைந்து தெலுங்கு நடிகர் நாக சவுரியா நடித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் சாய் பல்லவி மரியாதைக் குறைவாக நடந்துகொண்டார்; அவரது செயல்கள் தன்னை எரிச்சலடைய வைத்ததாக நடிகர் நாக சவுரியா புகார் கூறியிருந்தார்.

இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்குப் பேட்டி அளித்த சாய் பல்லவியிடம் நாக சவுரியாவின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நாக சவுரியாவுடன் என்ன பிரச்சினை செய்தேன் என்று தெரியவில்லை. அவரிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொள்ளவில்லை. அதுபற்றி என்னிடம் அவர் ஒருபோதும் கேட்டதுமில்லை. ஆனால் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாகப் பேசியதற்காக மகிழ்ச்சியடைகிறேன். அப்போதுதான் எனது செயல்பாட்டை நான் உணரமுடியும். யாரும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது நல்லது. குறிப்பாக சினிமா போன்ற துறையில் இது அவசியம். நாக சவுரியா என்னைப் பற்றித் தவறாகக் கூறியதால் எனக்கே என் மீது சந்தேகம் வந்தது. உடனே இயக்குநர் விஜய்யை அணுகிப் படப்பிடிப்பில் எனது நடத்தையில் எங்கு தவறு நடக்கிறது என்று கண்காணித்துச் சொல்லுங்கள் என்றேன். அதன் பிறகு அவரோ மற்ற யாருமே என் மீது புகார் எதுவும் இல்லை என்றுதான் கூறினார்கள். என்ன தவறு என்று தெரிந்தால் அதைத் திருத்திக்கொள்வேன். அவர் ஒரு நல்ல நடிகர். அவரின் புகாரால் என் மனம் பாதித்தது உண்மைதான். ஆனால் அவரது வெளிப்படையான பேச்சை மெச்சுகிறேன். இனிமேல் அவர் என்னைப் பற்றித் தவறாக நினைக்க மாட்டார் என நம்புகிறேன்” என்று பதிலளித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*