By March 4, 20180 CommentsReport

ஜோதிகாவுக்கு முதலாளியாக லக்ஷ்மி மஞ்சு..!!

வித்யா பாலன் நடித்திருந்த ‘துமாரி சுலு’ ரீமேக்கில் ஜோதிகாவுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை லக்ஷ்மி மஞ்சு.

‘மகளிர் மட்டும்’ படத்துக்குப் பிறகு ‘நாச்சியார்’ படத்தில் நடித்த ஜோதிகா, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘துமாரி சுலு’ படத்தின் ரீமேக்கிலும் நடிக்கவுள்ளார்.

வித்யா பாலன் நடித்திருந்த ‘துமாரி சுலு’, பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டானது. இதைத் தமிழில் இயக்குநர் ராதாமோகன் ரீமேக் செய்ய, வித்யா பாலன் ஏற்று நடித்த ஆர்.ஜே கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார். மேலும், ஒரிஜினல் வெர்ஷனில் நேஹா தூபியா நடித்த கேரக்டரில் லக்ஷ்மி மஞ்சு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழில் கடல் படத்துக்குப் பிறகு நான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அதனால் இந்தப் படம் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன். துமாரி சுலுவில் நேஹா தூபியா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அவர் அதில் ரேடியோ ஸ்டேஷன் ஹெட்டாக நடித்துள்ளார். அதில் அவர் ரொம்ப ஸ்டைலாக இருப்பார் என்று சொல்கின்றனர். ஆனால், நான் இன்னும் அந்தப் படத்தை பார்க்கவில்லை. பார்த்த பிறகுதான் நானும் அதுபோல மாற முயற்சி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கவுள்ளார். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்தப் படத்துக்கு பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராகப் பணியாற்றவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை வருகிற மே மாதம் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்களின் பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது


Post a Comment

CAPTCHA
Refresh

*