அனுஷ்கா படத்திற்கு தடை..!!
அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள பரி படத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தனது நீண்ட நாள் காதலரான இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியாகியுள்ள முதல் படம் பரி. இந்தப் படத்தை ரோசிட் ராய் இயக்கியுள்ளார். அனுஷ்கா தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான க்ளீன் ஸ்டேல் என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் பாகிஸ்தான் அரசு இந்தப் படத்தைத் அங்கு வெளியிட தடை விதித்துள்ளது. குரான் மற்றும் மந்திரங்களைக் கொண்டு மாயாஜாலம் செய்யும் விதமாகக் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் இது இஸ்லாமிய மதத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்துவதாக கூறி இந்தப் படத்தை தடை செய்வதாக பாகிஸ்தான் தணிக்கை குழு உறுப்பினர் இஷாஹ் அகமது தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
ஏற்கனவே பாலிவுட் இயக்குநர் பால்கி உருவாக்கத்தில் அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் ஆகியோர் நடித்த பேட் மேன் படத்தில், “விலக்கப்பட்ட கருத்தைப் படமாக எடுத்திருக்கிறார்கள்; எனவே இந்தப் படத்தை எங்கள் நாட்டில் திரையிட முடியாது. அப்படித் திரையிட்டால் எங்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை இது பாதிக்கும்” எனக் கூறி பாகிஸ்தானில் திரையிட மறுத்தது குறிப்பிடத்தக்கது.