By March 7, 20180 CommentsReport

சூர்யாவுக்கு ஒரு புதுப்பேட்டை..!!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்குப் பிறகு சூர்யா செல்வராகவன் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். சூர்யாவின் 36ஆவது படமான இதில் ரகுல்ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாமலே முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ள நிலையில் நேற்று செல்வராகவனின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் போஸ்டரைத் தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

போஸ்டரில், சுவரில் வரையப்பட்டுள்ள சூர்யாவின் ஓவியம் இடம்பெற்றுள்ளது. தலையில் தொப்பி, கூலிங்கிளாஸ் சகிதம் உள்ள அந்தப் படம் சே குவராவின் படத்தை ஒத்திருப்பதாக உள்ளது. போராட்டத்தைக் குறிக்கும் விதமாக ஓங்கிய கைகளின் படங்களும் உள்ளன. இதனால் இந்தப் படம் அரசியலை மையமாகக் கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்வராகவன் அரசியலை மையமாக வைத்து எடுத்த புதுப்பேட்டை படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

படத்திற்கு என்ஜிகே (NGK) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெரிய தலைப்புகளை எளிதாகக் குறிக்கும் விதமாக வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை மட்டும் குறிப்பிடும் வழக்கம் திரையுலகில் நிலவிவருகிறது. அந்தவகையில் இது பெரிய தலைப்பின் சுருங்கிய வடிவமா அல்லது இதுதான் தலைப்பா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*