By March 10, 20180 CommentsReport

அஜித்திற்காகக் காத்திருக்கும் ரோபோ சங்கர்..!!

இதுநாள் வரை பார்த்திராத அஜித்தை முதல் நாள் படப்பிடிப்பில் பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறேன் என்று நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.

அஜித்-சிவா கூட்டணியில் வெளியான விவேகம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராமல் ஏமாற்றத்தைத் தந்ததால் மீண்டும் இவர்கள் கூட்டணியில் உருவாகவுள்ள விஸ்வாசம் படத்திற்கு மிகுந்த கவனத்துடன் நடிகை, நடிகர்களைத் தேர்வு செய்துவருகின்றனர். அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முதன்முறையாக அஜித் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தம்பி ராமையா, யோகிபாபு ஆகியோர் நகைச்சுவைக் கலைஞர்களாக ஒப்பந்தமானார்கள். இந்த நிலையில் ரோபோ சங்கரும் தற்போது இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளார்.

படம் முழுக்க அஜித் கூடவே வரும் கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடிக்கிறார். இதற்காக கிட்டத்தட்ட 50 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்திருக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துவரும் இதன் படப்பிடிப்பு மார்ச் 22ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் சிட்டியில் தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

அஜித்துடன் முதன்முறையாக இணைந்தது குறித்து ரோபோ சங்கர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “இதுவரைக்கும் நான் அஜித்தை நேரில் பார்த்ததில்லை. முதல்நாள் ஷூட்டிங்கில் தான் பார்க்கப்போகிறேன். பயங்கர எதிர்பார்ப்போடவும், ஆவலுடன் அவரைப் பார்க்கக் காத்திருக்கேன். இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டதற்குப் பலன் கிடைத்திருக்கிறது. மாரிக்குப் பிறகு அமைந்த மிகப் பெரிய படம் இது. கண்டிப்பா எனக்கு நல்ல பெயர் கிடைக்கும். அவரோடு ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும். அவருடன் பணிபுரியும் ஒவ்வொரு நொடியும் என் வாழ்வில் பொன்னான நாளாகும்” என்று தெரிவித்துள்ளதாக ட்ராலிவுட் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*