By March 10, 20180 CommentsReport

விஷாலின் இரும்புத்திரையா, ரஜினியின் காலாவா?..!!

சிக்கலான பிரச்சினையை மேலும் சிக்கல் ஆக்குவதுபோலப் பேசினால், ‘எரியுற தீயில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊத்துறீங்களா?’ என்பார்கள் கிராமங்களில். அது போன்றுதான் உள்ளது திரையுலக இடியாப்பச் சிக்கல்கள்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் டிஜிட்டல் நிறுவனங்களைக் கட்டணக் குறைப்பு செய்யுமாறு வலியுறுத்தி மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்வதை நிறுத்திவைத்துள்ளனர். இதனால் கடந்த ஒரு வார காலமாக தமிழக திரையரங்குகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால்கடந்த ஒரு வார காலத்தில் திரையரங்குகளுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வியாபார வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடித்துவந்தது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்.

சென்னையில் நேற்று (மார்ச் 8) மாலை பொதுச்செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம் தலைமையில் சங்கத்தின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் ஆர்.எம்.அண்ணாமலை இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கோவை சுப்பிரமணி, ராஜமன்னார், வேலூர் சீனு, தென்காசி பிரதாப் ராஜா மற்றும் 150க்கும் மேற்பட்ட தியேட்டர் அதிபர்கள் கலந்துகொண்டனர். சென்னை நகரில் இருந்து யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில் தமிழக அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி மார்ச் 16 முதல் தமிழகத்தில் தியேட்டர்களை மூடுவது என முடிவெடுத்துள்ளனர். கடந்த வருடம் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிராக தியேட்டர்கள் மூடப்பட்டபோது தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்படும் என அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாம். இன்று வரை அதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை. எனவே தமிழக முதல்வரை மீண்டும் சந்தித்து ஆணை பிறப்பிக்கக் கோரி மனு கொடுப்பது என்றும், ஒரு வார காலத்திற்குள் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் மார்ச் 16 முதல் தியேட்டர்களை மூடுவது எனவும் அதிரடியாக முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகையிலும் தமிழக அரசை அனுசரித்து தொழில் நடத்த வேண்டிய தியேட்டர் அதிபர்கள் எப்போதும் இல்லாத ஆக்ரோஷத்துடன் இப்படி ஒரு முடிவு எடுக்க என்ன காரணம் என உள்வட்டத்தில் விசாரித்தபோது, “கடந்த ஒரு வார காலமாக எங்கள் பிழைப்பைக் கெடுத்தது தயாரிப்பாளர்கள் சங்கம். புதிய படங்களை ரிலீஸ் செய்ய மற்ற நிர்வாகிகள் சம்மதித்தாலும் தலைவர் விஷால் டிஜிட்டல் நிறுவனங்கள் கட்டணத்தைக் குறைக்காத வரை புதிய படம் ரிலீஸ் இல்லை என்பதில் பிடிவாதமாக உள்ளார். மார்ச் 29இல் அவர் தயாரிப்பில் தயாரான இரும்புத்திரை ரிலீஸ் என்று அறிவித்துவிட்டுத்தான் மார்ச் 1 முதல் புதிய படங்கள் நிறுத்தப்பட்டன. இந்த சூழலில் காலா ஏப்ரல் வெளியீடு என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்றைய அரசியல் சூழலில் தமிழக அரசு ஆணையை உடனடியாகப் பிறப்பிக்காது. பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றுவருவதால் எந்தப் படம் வந்தாலும் வசூல் இருக்காது. அதனால் 16 முதல் தியேட்டரை மூடினால் கரண்ட் பில், தினசரி பராமரிப்புச் செலவு கிடையாது.”

“இரண்டு வார காலம் வேலைநிறுத்தம், பேச்சுவார்த்தை என இழுத்துக்கொண்டு போய்விட்டால் விஷால் விரும்பினால் கூட இரும்புத்திரையை ரிலீஸ் செய்ய முடியாது. ஏப்ரல் மாதம் காலா கவனத்திற்கு வரும்போது இரும்புத்திரை எப்போது என்று தீர்மானிக்க முடியாது. 3 மாதம் தள்ளிப்போக வேண்டி வரும். இதன் மூலம் தொழில் ரீதியாக, பொருளாதார முடக்கத்திற்கு விஷால் ஆளாக வேண்டி இருக்கும். எங்கள் நோக்கம் இரும்புத்திரையை முடக்கி, நேரடியாக காலாவுக்கு கால்கோள் விழா நடத்தி கல்லா கட்டுவதே” என்கின்றனர் தியேட்டர் சங்க நிர்வாகிகள்.


Post a Comment

CAPTCHA
Refresh

*