By March 10, 20180 CommentsReport

ஹாரர் ஜானரில் ‘வெற்றிமாறன்..!!

காதல் பிரச்சினையினால் சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட ஒருவன் உயிர் தப்பி, தனது நிலைக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கும் ஹாரர் கதையாக உருவாகியுள்ளது ‘வெற்றிமாறன்’.

இயக்குநர் மனோ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வெற்றிமாறன்’. அபிசரவணன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக புதுமுகம் வினோலியா அறிமுகமாகிறார். தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜெயமணி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். குணசேகரன் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு டேவிட் கிறிஸ்டோபர் என்பவர் இசையமைத்துள்ளார்.

லுலு கிரியேஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.சுல்பிகர் தயாரிப்பில் உருவாகும் இப்படம் குறித்து இயக்குநர் மனோ கூறும்போது, “இறைவனின் படைப்பில் அனைத்து உயிரினங்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கைமுறையை வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் தனது இயல்பு வாழ்க்கைக்கு முரணாக வாழ விரும்புகிறான். அதனால்தான் காதல் என்கிற இயல்பான ஒரு விஷயத்தை அவனால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாமல் அதைத் தடுக்க பல வழிகளில் முயற்சிக்கிறான். இயற்கையின் படைப்பில் காதல் இயல்பான ஒன்று. ஆனால் எப்போதுமே சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் ஆகிவிட்டது. இதனால் பலர் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சிலர் பலியாகவும் செய்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒருவர் உயிர் தப்பி, தனது நிலைக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கக் கிளம்பினால்? அதுதான் இந்தப் படத்தின் கதை” என்று தெரிவித்துள்ளார்.

“இந்தப் படத்தின் கதையை போனிலேயே கேட்ட அபிசரவணன், உடனே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தை கொஞ்சம் ஹாரர் கலந்து வித்தியாசமான முறையில் உருவாக்கியுள்ளோம். குறிப்பாக, பழிவாங்கும் முறையில் நிறைய உத்திகளைக் கையாண்டுள்ளோம். அவை படத்தின் ஹைலைட்டான அம்சமாக இருக்கும். அது மட்டுமல்ல; இந்தப் பழிவாங்கும் விஷயத்தில் தந்தை மகன் பாசப் போராட்டமும் அடங்கும்” என்று கூறியுள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் விரைவில் இசை மற்றும் பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*