By March 16, 20180 CommentsReport

‘தானா சேர்ந்த கூட்டம்’ லாபமா?..!!

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்காக அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு
சூர்யா அன்பளிப்பாக கார் ஒன்றை வழங்கியுள்ளார். இதை தனது ட்விட்டர்
பக்கத்தில் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த சம்பவம் அந்தப்
படத்தின் விநியோகஸ்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புதுப் பட தொடக்க விழா அன்று ஆடி காரில் ஆர்ப்பாட்டமாய் வந்து இறங்கும்
தயாரிப்பாளர், படம் ரிலீசுக்கு முதல் நாள் பைனான்சியரிடம் வாங்கிய கடனை
செட்டில் செய்து படத்தை ரிலீஸ் செய்ய ஆடி கார் வரை அடமானம் போக
வெற்றிகரமாக படம் ரிலீஸ் உறுதி ஆகும். தயாரிப்பாளர் ஆட்டோவில் வீடு
திரும்புவார். காலைக் காட்சி முடிந்து படம் வெற்றி என்றால் ஆடி காரில்
தியேட்டர் விசிட் போவார் இல்லையென்றால் இருக்கிற இடம் யாருக்கும்
தெரியாமல் சில நாள்கள் தலைமறைவாகிவிடுவார். இதுதான் முன்ணணி ஹீரோக்களை
வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களின் இன்றைய நிலைமை.

2010இல் வெளியான சிங்கம் வெற்றிக்குப் பின் சூர்யா நடிப்பில் வெளிவந்த
மாற்றான், சிங்கம் – 2, அஞ்சான், மாசு (எ) மாசிலாமணி, 24, சிங்கம் – 3 என
அனைத்து படங்களும் நஷ்டம் ஏற்படுத்திவிட்டுப்போன படங்கள்தான். விக்னேஷ்
சிவன் இயக்கம், கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் சூர்யா நடித்து இவ்வருடம்
வெளியான தானா சேர்ந்த கூட்டம் முதல் மூன்று நாட்கள் கல்லா கட்டியது.
அடுத்தடுத்த நாட்களில் படம் பப்படமாகி விநியோகஸ்தர்கள் போட்ட முதலை
எடுக்க முடியாமல் போனது. தமிழகத்தில்சுமார் 36 கோடி வரை வியாபாரம்
செய்யப்பட்ட தானா சேர்ந்த கூட்டம், விநியோகஸ்தர்களுக்கு சுமார் 15 கோடி
நஷ்டம் ஏற்படுத்தியிருக்கிறது.

இது பற்றி தயாரிப்பாளர் மற்றும் நாயகன் சூர்யாவிடம் முறையிட
விநியோகஸ்தர்கள் ஒன்றுகூடி பேசிக்கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில்
படத்தின் வெற்றிக்காக இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நாயகன் சூர்யா கார்
பரிசளிப்பதாக புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனைக் கண்டு
விநியோகஸ்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். “தானா சேர்ந்த கூட்டம்
நஷ்டத்தை மறைக்கவும், திசை திருப்பவுமே இதனைச் செய்துள்ளனர்.
விநியோகஸ்தர்கள் நஷ்டத்தைக் கேட்பது உறுதி” என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.
இது சம்பந்தமாக பொது வெளியில் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வசூல்
கணக்கை வெளியிட அவர்கள் முடிவு செய்துள்ளனர்.


Post a Comment