By March 19, 20180 CommentsReport

கோலிவுட்டை விரும்பும் ஹூமா குரேஷி..!!

காலா படத்திற்குப் பிறகு தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்த சென்னையில் வீடு எடுக்கவிருப்பதாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி தெரிவித்திருக்கிறார்.

ரஜினியின் காலா படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ஹூமா குரேஷி. இதில் ஷரினா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காலாவின் டீசர் வெளியான போது ரஜினி தனது கையில் இந்த பெயரை பச்சைக் குத்தியிருந்ததால் ஷூமா குரேஷியின் கேரக்டர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், இந்த படத்திற்குப் பிறகு தான் மேற்கொள்ளவிருக்கிற செயல்பாடுகள் குறித்தும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

காலா படத்தின் படப்பிடிப்பு குறித்த அனுபவத்தைப் பேசியவர், “சென்னையில் நடைபெற்ற காலாவின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தது அற்புதமான அனுபவம். அனைவரும் என்னை அன்போடு வரவேற்றனர். தென்னிந்திய கலாச்சாரம் எனக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. அதனை நான் பின்பற்ற விரும்புகிறேன். ஆகையால், சென்னையில் ஒரு வீடு எடுக்க உள்ளேன்” என்றார்.

சென்னைக்கு வருவதால் மும்பை வீட்டை காலி செய்து விடுவீர்களா எனக் கேட்கப்பட்டபோது, “அப்படி இல்லை. மும்பை, சென்னை என மாறி மாறிப் பயணப்படவிருக்கிறேன். தமிழ், தெலுங்குப் படங்களில் நடிப்பது குறித்து இயக்குநர்கள் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதற்காகத்தான் இத்தகைய ஏற்பாடு” என்கிறார்.

ரஜினியுடன் இணைந்து பணிபுரிந்த அனுபவத்தை விவரித்தவர், “இந்தப் படத்தில் நடித்து வந்தபோது ரஜினி சாரின் எளிமை கண்டு மிகவும் வியந்தேன். அவருடைய வீட்டிலிருந்து படப்பிடிப்பு தளத்துக்கு வரவழைக்கப்பட்ட உணவை மிகவும் விரும்பிச் சாப்பிட்டேன்” என்று கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*