By March 19, 20180 CommentsReport

ஸ்ரீதேவி வேடத்தில் வித்யா பாலன்?..!!

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவியாக வித்யா பாலனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகப் படத்தின் இயக்குநர் ஹன்சால் மேத்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என இந்தியத் திரையுலகில் கோலோச்சியவர் நடிகை ஸ்ரீதேவி. திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிப்ரவரி 24ஆம் தேதி துபாய் சென்ற அவர், திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மரணம் இந்திய பட உலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. பின்னர், அவர் உடல் மும்பைக்குக் கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக உருவாக இருக்கிறது. பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஹன்சால் மேத்தா இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். ஸ்ரீதேவி வேடத்தில் வித்யா பாலனை நடிக்க வைக்க அவர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து அவர் ஐஏஎன்எஸ்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில், “நான் ஸ்ரீதேவியிடம் அவ்வளவாக நெருங்கிப் பழகியதில்லை. ஸ்ரீதேவியை வைத்து ஒரு படம்கூட இயக்கவில்லையே என்கிற வருத்தம் என்னிடம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறவிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

“நிறைய நட்சத்திரங்கள் என் மனதில் இருக்கிறார்கள். ஆனால், இந்தப் படத்தில் ஸ்ரீதேவி கேரக்டரில் நடிக்கவைக்க வித்யா பாலனை அணுகி வருகிறேன். அவரை வைத்தே படம் இயக்க வேண்டுமென விரும்புகிறேன்” என்றவர், ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை எடுக்கவிருப்பதாகவும் மேற்கொண்டு கூற மறுத்துவிட்டதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.


Post a Comment