By March 19, 20180 CommentsReport

திரைப்படமாகும் ஜெ வாழ்க்கை வரலாறு..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகையும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை முல்லைவனம் பட இயக்குநர் ரவி ரத்தினம் திரைப்படமாக உருவாக்கவுள்ளார்.

இதுகுறித்து, மதுரையிலுள்ள தனியார் உணவு விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் ரவி ரத்தினம், “தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரைப்பட, அரசியல், சமூக வாழ்க்கை குறித்த வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க இருக்கிறேன். நண்பர்களின் உதவியோடு இந்த முயற்சி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கான தலைப்பும் முடிவு செய்யப்பட்டு, முறையாகப் பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஜெயலலிதாவின் திரைப்பட வாழ்க்கையில் அவர் பெற்ற வெற்றி, அரசியலில் எம்ஜிஆரால் எவ்வாறு கொண்டுவரப்பட்டார், பிறகு தன்னைச் சுற்றியிருந்த எதிரிகளுக்கு மத்தியில் துணிச்சலாக அரசியல் செய்த விதம், தமிழகத்தின் தண்ணீர் உரிமைகளை எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் பெற்றுக் கொடுத்தது எனப் பல்வேறு விஷயங்கள் இந்தப் படத்தில் இடம்பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

“ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் எவ்வாறு தமிழக அரசால் நினைவிடமாக அறிவிக்கப்பட்டுள்ளதோ, அதுபோன்று ஜெயலலிதாவும் ஏழு கோடி தமிழக மக்களுக்குச் சொந்தமானவர். ஆகையால், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த இந்த முயற்சிக்கு எவரும் தடை கோர மாட்டார்கள் என நம்புகிறோம். தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் எங்களது படப்பிடிப்பு நடைபெறும். மதுரைக்கும் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த அடிப்படையில்தான் அவரது வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை அறிவிப்பதற்கு மதுரையை தேர்ந்தெடுத்தோம்” என்று கூறியுள்ளார்.

“ஜெயலலிதாவின் முகச்சாயல் ஒத்துப்போகக்கூடிய ஒரு நடிகையைத்தான் தற்போது தேர்வு செய்து வைத்துள்ளோம். படத்தின் ஒளிப்பதிவு தொடங்கும்போது அந்த நடிகையை அறிமுகம் செய்வேன். வரும் மே மாதம் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஓராண்டு நடைபெறும்” என்று அறிவித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*