By March 21, 20180 CommentsReport

சிறந்த திரைப்படமாக ‘என் மகன் மகிழ்வன்..!!

ஆண் ஓரின ஈர்ப்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘என் மகன் மகிழ்வன்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றிருக்கிறது.

ஆண் ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து முதன்முதலாக தமிழில் உருவாக்கப்பட்டுள்ள முழுநீள திரைப்படம் என் மகன் மகிழ்வன் (My Son is Gay). இதில் அனுபமா, குமார், அபிஷேக் ஜோசப், அஸ்வின்ஜித், கிஷோர், ஜெயபிரகாஷ் மற்றும் ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் லோகேஷ் குமார் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் மெல்போர்ன், நியூயார்க், கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தான், பிலடெல்பியா நகரங்களில் நடந்தேறிய பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று தமிழ்த் திரையுலகிற்குப் பெருமை தேடித் தந்துகொண்டிருக்கிறது. வெகுவாக மக்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் இது இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கிறது.

இந்த நிலையில், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த இரண்டாவது இந்தியன் வேர்ல்ட் ஃபிலிம் பெஸ்டிவலில் இப்படம் திரையிடப்பட்டது. துருக்கி, இஸ்தான்புல், அமெரிக்கா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த முக்கியத் திரைப் பிரமுகர்களை நடுவர்களாகக் கொண்ட இந்தத் திரைப்பட விழாவில், இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் விருதுகளுக்குப் போட்டியிட்டது. இந்தப் போட்டியில் லோகேஷ் இயக்கிய ‘என் மகன் மகிழ்வன்’ சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்பட்டது.

இது குறித்துப் பேசிய இயக்குநர் லோகேஷ், “இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ரஜினிஷ் கனுஜாவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்களுடைய முழு திரைப்படக் குழுவிற்கும் கிடைத்த வெற்றி. இந்தப் படத்தை இணைந்து தயாரித்து ஆரம்பத்திலிருந்தே எங்களுக்குப் பக்கபலமாக இருந்துவரும் அணில் சக்சேனா மற்றும் சிரில் டி’சௌசா போன்றோரின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. இந்த விருது, படக் குழுவினருக்கு மேலான நம்பிக்கையையும், மக்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது” எனத் தனது மகிழ்ச்சியைப் வெளிப்படுத்தியிருக்கிறார்.


Post a Comment