சஞ்சனாவுக்கு காத்திருந்த படக்குழு..!!
ஹாலிவுட் படமான ‘தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்’ இந்தியில் ரீமேக்காக உள்ளது. இந்தப் படத்தில் சஞ்சனா ஷாங்கி கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜான் கிரீன் எழுதிய ‘தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்’ நாவலைத் தழுவி அதே பெயரில் ஹாலிவுட்டில் 2014ஆம் ஆண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டது. இப்படம் அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கதாநாயகி யார் என்பது மட்டும் முடிவாகாத நிலையில் மற்ற படவேலைகள் நடந்துவந்தன. கதாநாயகியைப் படக்குழு எதிர்பார்த்திருந்தது. தற்போது சஞ்சனா ஷாங்கி கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்பதை சுஷாந்த் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சஞ்சனா ஏற்கனவே ராக் ஸ்டார், இந்தி மீடியம், ஃபக்ரே ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் விரைவில் படப்பிடிப்ப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படம் குறித்து ரஹ்மான் பிடிஏக்கு அளித்த பேட்டியில், “இந்தி பதிப்பிற்கான கதையை கேட்ட போதே என்னை ஈர்த்தது. மனதை அள்ளும் இந்தக் கதைக்கு எந்த மாதிரியான முறையில் இசையமைக்கலாம் என்பதைக் கவனித்துவருகிறேன்” என்று கூறியுள்ளார்.