By March 21, 20180 CommentsReport

வில்லனாக மாறிய ஐடி ஊழியர்..!!

களஞ்சியம் இயக்கத்தில் உருவாகியுள்ள முந்திரிக்காடு படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் நடிகர் சோமு. இவர் நடிப்பில் வெளியான 6 அத்தியாயம் திரைப்படம் பலரது பாராட்டைப் பெற்றது. தற்போது வெற்றி மாறனின் இயக்கத்தில் ‘வட சென்னை’யிலும் நடித்துவருகிறார்.

சமீபத்தில் முந்திரிக்காடு படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், “என்னைத் திரையுலகிற்கு முழுத் தகுதியாக வளர்த்து உருவாக்கியவர் இயக்குநர் களஞ்சியம்தான். முந்திரிக்காடு படத்தில் நான் நடிக்கும்போது என்னைச் சரியானபடி நடிக்க வைக்க எனக்கு நடிப்புப் பயிற்சியளித்தார். நான் ஐடி துறையில் பணியாற்றிவந்தேன். படத்துக்காகப் பெரிய தாடி ஓராண்டு காலம் வளர்த்தேன். ஐடி துறையில் தாடியுடனா என்று அலுவலகத்தில் என்னைச் சிலர் அருவருப்பாகப் பார்த்தார்கள். அதை நான் பொறுத்துக்கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

முந்திரிக்காடு படத்தின் படப்பிடிப்பை பற்றித் தெரிவித்த அவர், “படத்தில் முக்கியமான வில்லன் நான்தான். படத்தின் பெரும் பகுதியில் நான் வருவேன். சுமார் 60 நாட்கள் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி என்று படப்பிடிப்பு நடந்தது. முந்திரிக்காடுகளில் செம்மண் பூமியில் இப்படிப் படப்பிடிப்பு போனது மறக்க முடியாதது. நான் நடித்திருந்ததை அண்ணன் சீமான் அவர்கள் பார்த்து என்னைத் தனிப்பட்ட முறையில் பாராட்டி வாழ்த்தியிருந்தார். அதை மறக்க முடியாது. அது விருது கிடைத்த மகிழ்ச்சியைத் தந்தது” என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகிவரும் வடசென்னை படம் குறித்துக் கூறியுள்ள சோமு, “வடசென்னை படத்தில் நடித்ததும் மறக்க முடியாதது. அதில் நான் சிறிய அளவில் வந்தாலும் அடையாளம் கண்டு பாராட்டப்படுவேன். இந்த 2018 முடிவுக்குள் உங்கள் மனதில் பதிகிற ஒரு நடிகனாக நான் வந்துவிடுவேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் .


Post a Comment

CAPTCHA
Refresh

*