By March 21, 20180 CommentsReport

தாய்மொழி காக்கும் நீது சந்திரா..!!

நீது சந்திரா பல்வேறு மொழிப் படங்களில் நடித்துவந்தாலும் தாய்மொழியின் அவசியம் குறித்து பாடல்கள் வெளியிட்டுவருகிறார்.

யாவரும் நலம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நீது சந்திரா. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளைக் கற்று நடித்துவந்தாலும் தாய்மொழி குறித்த பிரக்ஞையுடன் செயலாற்றிவருகிறார்.

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் போஜ்புரி மொழியில் வீடியோ ஆல்பம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டிருந்தார். தாய்மொழியின் முக்கியத்துவம் பற்றி அந்தப் பாடல் விளக்கியிருந்தது. தற்போது மகஹி மொழியில் கவிதை ஒன்றுக்கு வீடியோ அமைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் நீது சந்திரா, “கவிதையை எழுதி இயக்கியவர் எனது சகோதரர் நிதின் நீரா சந்திரா. இதில் நடித்த விகாஷ் குமாரும் சில வரிகளை எழுதியுள்ளார். இந்தி மொழி முக்கியம் என்றாலும் நமது தாய்மொழியை எப்படி புறக்கணிக்கமுடியும் என்ற கேள்வியை எழுப்புவதோடு பிகார் மொழிகளையும் அவற்றின் வளமான கலாச்சாரத்தையும் இந்த கவிதை பேசுகிறது. பிகாரில் போஜ்புரி, மைதிலி, மகஹி, ஆன்ஜிகா, பாஜ்ஜிகா என ஐந்து மொழிகள் உள்ளன. ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. இந்த மொழிகளில் திரைப்படங்கள், வீடியோக்கள், ஆவணப்படங்கள் உருவாக்க விரும்புகிறேன். நமது பாரம்பரிய வேர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக செயல்படவேண்டும்” என்று கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*