By March 22, 20180 CommentsReport

உடல் ஆரோக்கியமே முக்கியம்: இலியானா..!!

பட வாய்ப்புகளைவிட என் உடல் ஆரோக்கியத்திற்குத்தான் முக்கியத்துவம் தருகிறேன் என்று நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் வெளியான பர்ஃபி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற இலியானா, விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றார். இந்தி, தெலுங்கு சினிமாவுலகில் தொடர்ந்து பயணித்துவரும் அவர், தற்போது கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி குறிப்பிட்ட சில படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். இந்த நிலையில் இன்றைய சினிமாவுலகம் குறித்தும் தன்னுடைய மனநிலை குறித்தும் கல்ஃப் நியூஸுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

“எனக்கு சினிமாவில் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை. 5 ஆண்டுகளில் இப்படி இருக்க வேண்டும் என்ற எந்த திட்டமும் இல்லை. எதிர்பார்ப்புகள் இருந்தால்தான் ஏமாற்றம் ஏற்படும். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்று மட்டுமே சிந்திக்கிறேன். நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசியவர், “எனக்கு வரும் பட வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். சில படங்களில், ‘கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி என்னை மாற்றிக்கொள்ள தயாரா?’ என்று கேட்கிறார்கள். சினிமாவில் போட்டி நிறைந்திருக்கிறது. மற்றவர்களைவிட நமக்கு நல்ல கதாபாத்திரங்களும் கதைகளும் கிடைக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள்” என்று இன்றைய சினிமாவுலகை விவரித்துள்ளார்.

தனது உடல் தோற்றத்தில் குறைபாடு இருக்கிறதோ என்கிற எண்ணம் ஏற்பட்டு, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தோன்றியது என இலியானா முன்பு தெரிவித்திருந்தார். பின்னர் படிப்படியாக அந்த எண்ணத்திலிருந்து மீண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இன்னும் அவர் உடலளவில் முழுமை அடையவில்லை என்பதைத் தெரிவிக்கும் விதமாக, “எனக்கு மனப் போராட்டங்கள் இருந்தன. அதிலிருந்து தற்போது தேறிவருகிறேன். நடிப்பிலிருந்து கொஞ்சம் ஓய்வு எடுப்பது நன்றாக இருக்கிறது. எனது ஆரோக்கியத்தில் தற்போது கவனம் செலுத்திவருகிறேன்” என்று பேசியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*