By March 22, 20180 CommentsReport

‘அருவி’ மாதிரியான கதைகள் உருவாக வேண்டும்: ஐஸ்வர்யா..!!

அருவி மாதிரி நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்கள் அதிகம் உருவாக்கப்படவேண்டும் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திவரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்வருகிறார். தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல் மலையாள, இந்தி சினிமாவுலகிலும் அழுத்தமான தடம் பதித்துள்ளார். தற்போது வடசென்னை, செக்கச் சிவந்த வானம் என பிஸியாக நடித்துவருகிறார்.

இந்த நிலையில், தி இந்து நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ் சினிமாவில் தற்போதைய நிலை பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். ‘நடிகைகளின் இன்றைய நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்றபோது, “ஹாலிவுட்டில் 40 வயதில்கூட நடிகைகள் அழுத்தமான கேரக்டர்களில் நடிக்கின்றனர். தமிழ் சினிமாவிலும் குஷ்பு, ரேவதி, ரோஜா போன்ற நடிகைகள் நாயகிகளாக இருந்தபோது அவர்களது கேரக்டர்கள் வலுவாக இருந்தன. ஆனால் இன்றைய திரைப்படங்களில் நாயகிகள் பெரும்பாலும் நடனத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசியவர், “சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் போன்ற நடிகைகள் கமர்ஷியல் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நடிகைகளுக்கும் அழுத்தமான கதாபாத்திரங்களை இயக்குநர்கள் உருவாக்க வேண்டும். அருவி மாதிரி நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்கள் அதிகம் உருவாக்கப்படவேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


Post a Comment