By March 22, 20180 CommentsReport

பெண் தேடும் ஆர்யா: தொடரும் சிக்கல்..!!

நடிகர் ஆர்யா பங்கேற்கும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் 18 இளம் பெண்களில் தனக்கு ஏற்ற மணப்பெண்ணை நடிகர் ஆர்யா தேர்வு செய்யும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு நடனம், ஃபேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த ஜானகியம்மாள் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இந்த நிகழ்ச்சி குறித்து மனு தாக்கல் செய்தார். அதில், ”கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சேனலில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகை சங்கீதா போட்டியில் பங்கேற்கும் பெண்களைத் தேர்வு செய்வது, நீக்குவது என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார். இது பெண்களின் மாண்பைச் சிதைக்கும் வகையில் உள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்தின்படி பாலியல் சமத்துவ மீறலாகும். இதில் பெண்களைக் காட்சிப்பொருளாகக் காண்பிக்கின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.

“பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி ஆண்களுக்கு நிகராக செயலாற்றிவரும் நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகள் பெண்கள் மீது தவறான கருத்தை ஏற்படுத்தும். இந்த நிகழ்ச்சியைத் தொடர அனுமதித்தால் இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் சூழல் ஏற்படும். எனவே பெண்களுக்கு எதிரான வன்முறையை அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிப்பதுடன், சேனல் தலைமைச் செயல் அலுவலர், நடிகர் ஆர்யா, நிகழ்ச்சித் தொகுப்பாளர் நடிகை சங்கீதா ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் நேற்று (மார்ச் 20) மாலை விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைச் செயலர் மற்றும் சினிமா தணிக்கை வாரியத் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 18ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ஏற்கனவே ஒருமுறை இந்நிகழ்ச்சிக்காகக் கும்பகோணம் சென்ற ஆர்யாவை மகளிர் அமைப்பினர் அங்கிருந்து வெளியேறும்படி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு நடக்கவிருந்த ஷூட்டிங் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Post a Comment