By March 23, 20180 CommentsReport

ஹாலிவுட் பிரமாண்டத்தில் மகாபாரதம்..!!

மகாபாரதம் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் அதில் ஆமிர் கான் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானி இணை தயாரிப்பில் மகாபாரதம் தொடர் படங்களாக உருவாகவுள்ளது. ‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ படத்தில் நடித்துவரும் ஆமீர் கான் அந்தப் படத்தை முடித்தபின் மகாபாரதத்தை மையமாகக் கொண்டு உருவாகவுள்ள தொடர் படங்களில் நடிக்கவுள்ளதாக பாலிவுட் திரையுலகின் வணிக செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்துவரும் ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட்டில் வரலாற்றுச் சம்பவங்களை மையமாகக்கொண்டு பெரும் பொருட்செலவில் தொடர் திரைப்படங்களாக வெளியான தி லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ், கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஆகிய படங்கள் போன்று பிரமாண்டமாக ரூ.1,000 கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்துக்கான விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆமீர் கான் மகாபாரதக் கதையில் தான் நடிப்பது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். “மகாபாரதக் கதையில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. ஆனால், அதற்கு 15இல் இருந்து 20 ஆண்டுகள் செலவிட வேண்டும். கர்ணன் எனக்கு மிகவும் விருப்பமான கதாபாத்திரம். அர்ஜுனனையும் எனக்குப் பிடிக்கும். ஏனெனில், அவர் ஒருவர்தான் ‘ஏன் சொந்த மக்களையே கொல்கிறீர்கள்?’ எனக் கிருஷ்ணரையே கேள்வி கேட்பார்” என்று பேசியிருந்தார்.

இந்தப் படத்தில் ஆமீர் கான் நடிப்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் வேறு எந்தப் படத்திலும் அவர் ஒப்பந்தமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment