By March 23, 20180 CommentsReport

திரையுலகில் கருப்புப் பணத்தை ஒழியுங்கள்: சிம்பு

தமிழ் சினிமாவில் கருப்புப் பணத்தை ஒழியுங்கள் என்று தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் சிம்பு தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கம் நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து இயக்குநர் சங்கத்தோடு நேற்று (மார்ச் 21) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் யாருமே எதிர்பாராத வகையில் சிம்பு கலந்துகொண்டார். இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினர் என்பதால், அதன் உறுப்பினராக இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.

ஆனால் இக்கூட்டத்தில் தமிழ்த் திரையுலகினரின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தனது தரப்பு ஆலோசனைகளை எடுத்துரைத்திருக்கிறார். இது தொடர்பாக பிஹைண்ட்வுட்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்த் திரையுலகில் இருப்பதே 10 பெரிய நாயகர்கள்தான். அவர்களுடைய சம்பளத்தைக் குறைப்பதால் தமிழ் சினிமாவில் ஒன்றுமே ஆகிவிடாது. கடவுள் புண்ணியத்தில் நானும் அதில் ஒருத்தன். ஆனால் நீங்கள் எதற்குத் தமிழ் சினிமாவைக் கருப்பு பணத்தில் இயக்குகிறீர்கள். அனைத்தையும் வெள்ளைப் பணமாகக் கொடுத்து, ஒழுங்காக வரி கட்டி கணக்குக் காட்டுங்கள். எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார், எவ்வளவு வட்டி கட்டுகிறார் என்பது நாயகர்களுக்குத் தெரியவேண்டும். கருப்புப் பணம் என்பதால்தான் வெளியே தெரியவில்லை. இதே வெள்ளைப் பணமாக இருந்தால் அனைத்துமே வெளியே தெரிந்துவிடும். தமிழ் சினிமாவில் முதலில் கருப்புப் பணத்தை ஒழியுங்கள். அனைத்துமே சரியாகிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசியுள்ள அவர், “கருப்புப் பணமே இருக்கக் கூடாது எனச் சட்டம் கொண்டுவாருங்கள். திரையரங்குகளில் எவ்வளவு பேர் படம் பார்க்கிறார்கள் என்பது நடிகர்களுக்குத் தெரியவேண்டும். டிக்கெட் விலை எவ்வளவு? ஒரு காட்சிக்கு எத்தனைப் பேர் வருகிறார்கள்? தயாரிப்பாளருக்கு எவ்வளவு பணம் வருகிறது? உள்ளிட்ட விவரங்கள் நடிகர் மற்றும் இயக்குநர் என அனைவருக்குமே தெரியவேண்டும்” என்று சிம்பு பேசியதாகவும், அதற்கு அனைத்துத் தரப்பினருமே ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.


Post a Comment