By March 24, 20180 CommentsReport

படப்பிடிப்பை முடித்த இரு படங்கள்..!!

சசிகுமார், அஞ்சலி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் ‘நாடோடிகள் 2’ படத்தின் படப்பிடிப்பை வேகமாக முடித்திருக்கிறார் சமுத்திரக்கனி. அதேபோல கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் நடிகையர் திலகம் படப்படிப்பும் முடிவடைந்துள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, திரைப்படம் சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளையும் நிறுத்தி வைத்திருக்கிறது. ஆனால், சில படங்களே சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பைத் தொடர்ந்தது. அதில் சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படமும் ஒன்று.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. அதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது. ஒரு பாடல் காட்சிக்காக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டிருந்த நேரத்தில், தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பை வெளியிட்டது. படத்தை நிறுத்தினால் பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது அதுவும் நிறைவடைந்துள்ளது.

கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துவரும் சாவித்திரியின் படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது. அதுவும் முடிவடைந்துள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகிவருவதால் சிறப்பு அனுமதி பெறாமல் நடைபெற்று வந்தது. நடிகர் ஜெமினி கணேசனின் நினைவு தினம் நேற்று (மார்ச் 22) வருகிறது என்பதால் அதனை முன்னிட்டு படப்பிடிப்பை துரிதமாக முடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த ஒரு வருடமாக நீடித்த அற்புதமான பயணம் நிறைவு பெற்றுள்ளது. மிகவும் உணர்வுபூர்வமாகக் கடந்த காலத்துக்குக் கொண்டு செல்லப்பட்டேன். நாக் அஸ்வின் மற்றும் விஜயாந்தி பிலிம்ஸ் ஆகியோர் என்மீது நம்பிக்கை வைத்ததற்குப் பெரிய நன்றி. கடந்த காலம் குறித்துப் பெருமையுடன் திரும்பிப் பார்க்க நமக்கு ஒரு வாய்ப்பு. சாவித்திரியின் வாழ்க்கையைத் திரையரங்குகளில் காண ஆவலாக இருக்கிறேன்” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*