By March 24, 20180 CommentsReport

நாற்பதைத் தொட்ட ராணி முகர்ஜி..!!

கமல்ஹாசன் நடித்து இயக்கிய ஹேராம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராணி முகர்ஜி. 22 ஆண்டுகளாக திரைத் துறையில் வலம்வரும் நடிகையான இவர் தனது நாற்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “22 ஆண்டுகள் உங்கள் அன்பையும் பாராட்டையும் பெற்றுள்ள நான் அதிர்ஷ்டசாலி. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு நடிகர்களாகிய நமக்கு கிடைத்துள்ளது. செயல்பாடுகள் மற்றும் சிந்தனையில் நாம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். அனைத்து இயக்குநர்களுக்கும் நீங்கள் வழங்கிய கதாபாத்திரங்களுக்காக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களது படங்களும் கதாபாத்திரங்களுமே என் அடையாளமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், “ஒரு பெண்ணாக இது எனக்கு சுலபமான பயணமாக இருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் என்னை நிரூபிக்க வேண்டியுள்ளது. நடிகைக்கு இங்கு குறைந்த காலகட்டமே திரைத் துறையில் வழங்கப்படுகிறது; அதுவும் திருமணமான நடிகைகளின் வாய்ப்பு என்பது இறப்புக்கு ஒப்பானது. பெண்களை மையமாகக் கொண்டு (இந்த வார்த்தையை நான் வெறுக்கிறேன்) எடுக்கப்படும் படங்கள் என்பது பெரிய ரிஸ்க் என்பது போன்ற கற்பிதங்களை உடைக்க தினம் போராடவேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராணி முகர்ஜியின் நடிப்பில் இன்று (மார்ச் 23) வெளியாகியுள்ள படம் ஹிச்கி. ஃப்ரண்ட் ஆஃப் தி கிளாஸ் என்ற ஹாலிவுட் படத்தைத் தழுவி சித்தார்த் பி மல்கோத்ரா இயக்கியுள்ளார்.

படத்தைப் பார்த்த ஆமீர்கான், “நன்கு ரசித்துப் பார்க்கும்படியான படங்களைப் பார்த்து வெகுகாலமாகிவிட்டது. நல்ல கதை, அருமையான நடிப்பு, முழுவதுமாக ரசித்தேன். தவறவிட்டுவிடாதீர்கள். ராணி முகர்ஜி, சித்தார்த், நீரஜ் கபி மற்றும் நடித்த அனைத்து இளம் மாணவர்களுக்கும் நன்றி” என்று கருத்து தெரிவித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*