By March 24, 20180 CommentsReport

ஹாரர் கதையில் தன்ஷிகா..!!

மேளா கதையைக் கேட்டுவிட்டு உண்மையில் பிரமிப்பில் ஆழ்ந்துவிட்டேன் என்று கூறியுள்ளார் நடிகை தன்ஷிகா.

‘சினம்’ என்ற குறும்படத்தில் நடித்திருந்தார் நடிகை தன்ஷிகா. இந்தக் குறும்படம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது உள்பட எட்டு விருதுகள் ‘சினம் ’ குறும்படத்திற்குக் கிடைத்தது. மேலும் நார்வே திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றது; கலிஃபோர்னியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவிலும் திரையிடப்பட்டு விருதினை வென்றது.

சமீபத்தில் இது குறித்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய தன்ஷிகா “நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். கதாசிரியர்கள் தங்களின் மனதில் ஒரு நடிகையை வைத்து திரைக்கதையை உருவாக்கும் அந்தத் தருணம்தான் அனைத்து நடிகைகளுக்கும் சந்தோஷமான தருணம். எனக்கு அப்படி ஒரு அனுபவம் அண்மையில் ஏற்பட்டது” என்று கூறி, தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் தன்ஷிகா.

“தெலுங்குத் திரையுலகில் பிரபலமான கதாசிரியர் கிரண். அவர் என்னைச் சந்தித்து, உங்களை மனதில் வைத்து மேளா என்ற ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறேன் என்றார். இந்தக் கதையின் மூலமாகத்தான் இயக்குநராக அறிமுகமாகிறேன்; இது கதையின் நாயகியை மையப்படுத்திய திரைக்கதை; உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இதனை உருவாக்கியிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு முழுக் கதையையும் சொன்னார். அதைக் கேட்டுவிட்டு நான் பிரமிப்பில் ஆழ்ந்துவிட்டேன். அந்தளவிற்கு அந்தக் கதை என்னைக் கவர்ந்தது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

மேளா படத்தில் நீங்கள் இரட்டை வேடத்தில் நடிப்பதாகச் செய்திகள் வெளியாகிறதே என்ற கேள்விக்கு, “அது முழு உண்மையல்ல. ஆனால் ரசிகர்களுக்கு இரட்டை வேடமாகத்தான் தெரியும். இதைப் பற்றி மேலும் விவரமாகச் சொல்லக் கூடாது. படத்தில் நான் இரண்டு பரிமாணங்களில் நடிக்கிறேன். அதில் ஒரு கேரக்டரில் பேயாக நடிக்கிறேன். இந்தப் படத்தில் எனக்கு ஜோடி என்று யாருமில்லை. தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கிறார்கள்” என்று கூறி தெளிவுபடுத்தினார்.

இந்தப் படத்தில் நீங்கள் சண்டைக் காட்சிகளில் நடித்திருப்பது பற்றி கேட்கப்பட்டபோது, “பொதுவாக நான் நடிக்கும் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கவேண்டும் என்றால் நான் டூப் போடாமல் நடிப்பதைத்தான் விரும்புவேன். அதனால் இந்தப் படத்திலும் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் ரோப் ஷாட் மற்றும் உயரத்திலிருந்து குதிப்பது போன்ற காட்சிகளில் நிஜமாகவே நடித்து இயக்குநரின் பாராட்டைப் பெற்றேன். இந்தப் படத்தில் இடம்பெறும் அழகான பாடல் காட்சிகளிலும், நடன இயக்குநர் சந்திர கிரண் அவர்களின் நடன அமைப்பிற்கு ஏற்ப ஐம்பது முறைக்கு மேல் ஒத்திகை பார்த்து ஆடியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

மேளா திரைப்படம் தன்ஷிகா தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படமாகும். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*