By March 25, 20180 CommentsReport

நயன்தாரா வென்றது விருதை மட்டுமா?..!!

2017ஆம் ஆண்டு வெளியான நயன்தாரா படங்கள் அனைத்துமே ரசிகர்களால் அதிகளவில் ரசிக்கப்பட்டவை. வசூல், வியாபாரம் என்பதைத் தாண்டி ரசிகர்களின் பொழுதுபோக்கு நேரத்தை அவரது படங்கள் முழுவதுமாகக் கவர்ந்தன. இந்த வெற்றியின் அடையாளமாக ‘உலகப் பெண்கள் 2018’ விருது விழாவை நடத்திய தி இந்து பத்திரிகை, பொழுதுபோக்குத் துறையில் சாதித்ததற்காக ‘The Hindu Dazzler’ விருதினை நயன்தாராவுக்கு வழங்கிச் சிறப்பித்தது.

விருது விழாக்களுக்கு வருவதை கடந்த சில வருடங்களாக தவிர்த்துவந்தார் நடிகை நயன்தாரா. பல விருது விழாக்களில் அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டு, பிறகு அவர் வரமாட்டார் என்று தெரிந்ததும் வெற்றிபெற்றவரது பெயர் மாற்றப்பட்ட வரலாறெல்லாம் உண்டு. ஆனால், இந்து பத்திரிகைக் குழுமத்தின் சார்பில் வழங்கப்பட்ட இந்த விருது விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து சாதித்த பல பெண்களுடன் சேர்ந்து தனக்கான விருதினை நயன்தாரா பெற்றுக்கொண்டார்.

லினென் துணியில் நெய்யப்பட்ட சில்க் சேலையிலும், மிண்ட் கிரீன் கலர் ஸ்லீவ்லெஸ் மற்றும் சைனீஸ் காலர் வைத்த பிளவுஸுடனும் நயன்தாரா இவ்விருது விழாவில் கலந்துகொண்டார். ஒரு விழாக் கொண்டாட்டத்தில், தன்னை எப்படி அழகுபடுத்திக்கொள்வது, தனித்துவப்படுத்துவது என்பதை நயன்தாராவுக்கு யாரும் சொல்லித் தரத் தேவையில்லாத நிலைக்கு அவர் சென்றுவிட்டார். இத்தனை அலங்காரத்துக்குப் பிறகும், இதழ்களில் எவ்வித கலர் லிப்ஸ்டிக்கும் பயன்படுத்தாமல் இருந்ததே, அவரது ஸ்டைல் குறித்த அறிவுக்குச் சான்று.

நயன்தாரா இந்த விருது விழாவுக்குச் சென்று தனக்கான விருதை பெற்றது மட்டுமில்லாமல், அந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதும் ஒரு பேரலை போல டிரெண்டிங்கை மாற்றியது. கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணிநேரமாக,(நேற்று காலையிலிருந்து மாலை வரை) திமுக செயல் தலைவர் ஸ்டாலினை ‘ஸ்டாலின் பழமொழிகள்’ என்ற பெயரால் நெட்டிசன்கள் கலாய்த்துவந்தனர். நேற்று காலையில் அவர் பேசியபோது ஒரு பழமொழியினைத் தவறாகச் சுட்டிக்காட்டியதே இதற்குக் காரணமாக இருந்தது. ஆனால், நயன்தாரா ஃபோட்டோக்கள் ரிலீஸாகத் தொடங்கியதும் அனைத்தையும் மறந்துவிட்டு நயன்தாராவின் அழகை ரசிப்பது மட்டுமே ஒரே கடமையென நெட்டிசன்கள் ஒன்றிணைந்துவிட்டனர்.


Post a Comment