By March 25, 20180 CommentsReport

தனி ஒருவள்: வரலட்சுமி..!!

வரலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் சக்தி திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் நீல் நித்தின் முகேஷ் வில்லன் வேடத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

கதாநாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துவரும் வரலட்சுமி கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் சக்தி திரைப்படத்தில் நடித்துவருகிறார். மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரியதர்ஷினி முதன்முறையாக இயக்குகிறார். விஜய் நடித்த கத்தி படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்ற நீல் நித்தின் முகேஷ் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இயக்குநர் பிரியதர்ஷினி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் அதை உறுதிசெய்துள்ளார்.

“ஹேண்ட்சம் லுக்கில் வில்லன் இருந்தால் சரியாக இருக்கும் என நினைத்தேன். கத்தி திரைப்படத்தில் நடித்த நீல் பொருத்தமாக இருப்பார் எனத் தோன்றியது. மும்பையில் அவரை சந்தித்து இரண்டு மணிநேரம் கதையை விளக்கினேன். முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இரண்டாம் பாதியில் வில்லன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நீலுக்கு கதை மிகவும் பிடித்துப்போனது. உடனே நடிக்க சம்மதித்தார்” என்று கூறியுள்ளார்.

வில்லன் கதாபாத்திரம் புனேவில் இருந்து வந்தவராக படத்தில் காட்டப்படுகிறது. அறிவானவனாகவும் ஆபத்து நிறைந்தவனாகவும் இருப்பதாக பிரியதர்ஷினி கூறியுள்ளார். “யாரேனும் தனக்கு நிகராக இருக்கிறார்கள் என்று அவர் உணர்ந்தால் எந்த விலை கொடுத்தேனும் அவர்களை வெற்றி பெற முயல்வார். இரண்டாம் பாதியில் வரலட்சுமிக்கும் அவருக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெறுகின்றன” என்று கூறியுள்ளார்.

அறிவான, ஆபத்து நிறைந்த வில்லன் என பிரியதர்ஷனி கூறியிருப்பது தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமி நடித்த சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. அந்தப் படத்தின் வெற்றி பெரிதும் அந்தக் கதாபாத்திர உருவாக்கத்தையே சார்ந்திருந்தது. சக்தி திரைப்படமும் அந்த வகையில் வெற்றிப்படமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நீல் நித்தின் முகேஷ் தற்போது பிரபாஸுடன் ‘சாஹோ’ படத்தில் வில்லனாக நடித்துவருகிறார்.


Post a Comment