தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக அரவிந்த் சாமி?..!!
தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் மேற்கொண்டுவருவது குறித்து நடிகர் அரவிந்த் சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் நிறுவனங்களின் அதிக கட்டண உயர்வைக் குறைக்கும் விதமாக மார்ச் 1ஆம் தேதி முதல் புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். மார்ச் 16ஆம் தேதி முதல் உள்ளூரில் நடைபெற்றுவந்த படப்பிடிப்புகளும், திரைப்படம் சம்பந்தமான அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல, நேற்று மார்ச் 23ஆம் தேதி முதல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில படங்கள் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்திவருகின்றன.
இந்த நிலையில், இந்த வேலைநிறுத்தம் குறித்து நடிகர் அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். “என்னைப் பொறுத்தவரை மாஸ்டரிங் அல்லது விபிஎஃப் செய்வதற்கான கட்டணத்தை தயாரிப்பாளரே ஏற்றுக்கொண்டால்தான் உள்ளடக்கம் சிதையாமல் இருக்கும். அதேபோல அந்த உள்ளடக்கத்தால் வரும் விளம்பரத்திற்கான லாபமும் தயாரிப்பாளருக்கு கிடைக்க வேண்டும். வேண்டுமானால் லாபத்தில் விநியோகஸ்தர்களுக்கு பங்கு தரலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.