மகாநதி: தேர்வுக்குத் தயாராகும் துல்கர்..!!
மகாநதி படத்துக்காக தேர்வுக்கு மெனக்கெடுவது போல படித்து வருகிறார் நடிகர் துல்கர் சல்மான்.
தமிழ், மலையாள சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் துல்கர் சல்மான். இளம் நடிகர்களுள் கவனிக்கத்தக்க ஒருவராக வலம்வரும் இவர், நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் உருவாகிவரும் படத்தில் நடித்திருக்கிறார். இதில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது படத்துக்கான டப்பிங் பணிகள் தொடங்கியிருக்கிறது. இதுவரை தமிழ், மலையாளப் படங்களில் டப்பிங் பேசிய துல்கர், தெலுங்கு மொழியில் டப்பிங் பேசுவது முதன்முறை என்பதால் அதற்காகத் தயாராகி வருகிறார். அவர் பேச வேண்டிய வசனத்துக்கான ஸ்கிரிப்டை அவரிடம் கொடுத்திருப்பதால் அதை தேர்வுக்குப் படிப்பது போல் படித்து வருகிறார்.
இது சம்பந்தமான புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதுடன், “இந்த புகைப்படங்களைப் பார்த்து நான் தேர்வுக்காகப் படிக்கிறேன் என நினைக்க வேண்டாம். நான் தெலுங்கில் முதன்முறையாக டப்பிங் பேசவிருக்கிறேன். அதற்காகத்தான் இந்த முயற்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.