By March 27, 20180 CommentsReport

மூச்சுவிட சிரமப்பட்ட அதர்வா..!!

மூச்சுவிடக்கூட முடியாத அளவுக்கு அதர்வா ‘பூமராங்’ படத்தில் கடுமையாக உழைத்திருப்பதாக இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துவரும் படம் பூமராங். இதில் அதர்வாவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துவருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் இந்துஜா ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சிக்காக பிரமாண்ட செட் அமைத்துப் படமாக்கப்பட்டது. 2,000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் மற்றும் சிறந்த 100 நடனக் கலைஞர்களைக்கொண்டு இந்தப் பாடலுக்கு காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் இந்தப் படம் குறித்தான சுவாரஸ்யமான விஷயங்களை டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் கண்ணன்.

அதர்வா இந்தப் படத்தில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார். இந்த மூன்று தோற்றங்களும் ஸ்கிரிப்டுக்கு முக்கியமாக இருக்கும் என்றவர், “மூன்று விதமான தோற்றத்தை ஒப்பனை தொழில்நுட்ப வல்லுநர்கள் பிரீத்திஷீல் சிங் மற்றும் மார்க் டிராய் டி’சோசா ஆகியோர் உருவாக்கியிருக்கிறார்கள். பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் இவர்கள் பத்மாவத், மாம், 102 நாட் அவுட் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள்” என்றார்.

இந்தப் படத்துக்குத் தேவையான தோற்றத்தை கொண்டுவர இரண்டு நாள்களாக மும்பையில் தங்கி, 12 மணி நேரங்களுக்கு மேலாக ஒப்பனை சம்பந்தமான பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் குறித்து விவரித்தவர், “அதர்வாவின் உடல் அமைப்பையும் அவருடைய கண்கள், மூக்கு, வாய் ஆகியவற்றையும் துல்லியமாக அளந்தனர். அவர் போன்ற மாதிரியை உருவாக்க அவரது உடல்மீது மாவைப் பூசினர். அதர்வாவால் மூச்சுவிட முடியவில்லை. அவர் மூச்சுவிடுவதற்கு மூக்கில் ஒரு சிறிய குழாய் பொருத்தப்பட்டது” என்றார்.

ஒப்பனை பணிகள் முடிவடைந்த பிறகு அதர்வா, “எனக்கு ஐந்து மணி நேரமாக என்ன நடந்தது எனத் தெரியவில்லை. ஏனென்றால் நான் இப்படி ஒரு மேக்கப் போடுவது இதுதான் முதன்முறை” என்று கூறியதாகத் தெரிவித்தவர், “எங்களின் அந்த உழைப்பு திரையில் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.


Post a Comment