மாற்றத்தைத் தரும் அனுஷ்கா..!!
மாற்றத்தைத் தரும் 30 வயதுக்கு உட்பட்ட 30 ஆசியப் பிரபலங்களின் பட்டியலில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இடம்பிடித்துள்ளார்.
இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளுள் ஒருவராகத் திகழ்கிறார் நடிகை அனுஷ்கா சர்மா. 29 வயதாகும் இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார்.
2007ஆம் ஆண்டில் மாடலாக தனது பயணத்தைத் தொடங்கிய இவர் ஷாருக் கானுக்கு ஜோடியாக ரப் நே பணா தி ஜோடி என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பத்மாஷா கம்பெனி, பாண்ட் பாசா பாரத், பிகே எனப் பல ஹிட் படங்களில் நடித்தார். ஏராளமான விளம்பரப் படங்களிலும் நடித்துள்ள அனுஷ்கா து என்எச் 10, பாரி உள்ளிட்ட சில படங்களின் மூலம் திரையுலகில் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றுவருகிறார்.
இந்நிலையில், ஆசியாவில், 30 வயதுக்கு உட்பட்ட தங்கள் துறையில் மாற்றத்தைத் தரும், வளர்ந்துவரும் பிரபலங்கள் என்ற பட்டியலில் 30 பேரின் பெயரை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் முதல் 30 பேர் பட்டியலில் இந்தியாவிலிருந்து நடிகை அனுஷ்கா சர்மா இடம்பிடித்துள்ளார். இவர் தவிர இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.