By April 7, 20180 CommentsReport

ஆறுச்சாமி மவன் ‘ராம்’சாமி வந்திருக்கிறார்..!!

காலா படத்தில் ரஜினி பேசி பாப்புலரான வசனம் என்பதால் இப்படியொரு டைட்டிலை வைக்கவில்லை. உண்மையாகவே, சாமி 2 படத்தில் டைட்டிலில் சொன்னதுதான் நடந்திருக்கிறது.

விக்ரம் நடிப்பில் சக்கபோடு போட்ட படம் சாமி. தனது எல்லா வெற்றிப் படங்களையும் அடுத்த பாகத்துக்குக் கொண்டுசென்ற ஹரி, சாமி படத்தை ‘சாமி ஸ்கொயர்’ என கெத்தாக அறிவித்தார்.

சில ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களும் ரிலீஸானது. அதிலிருந்து, முதல் பாகத்தில் கொல்லப்பட்ட பெருமாள் பிச்சையின் மகன்கள் மூன்று பேர் தலையெடுப்பதும், தன் தந்தையைக் கொன்ற ஆறுச்சாமியைப் பழிவாங்க தொடர்ந்து செல்வதுமாகவென கணிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் தொடர்ந்து சென்றது ஆறுச்சாமியை மட்டுமல்ல என்பது இப்போது தெரியவந்திருக்கிறது. ஆம், ஆறுச்சாமியின் மகன் ராம்சாமி இந்தப் படத்தில் இருக்கிறார். அந்த கேரக்டரும் விக்ரம் என்பதால், கொஞ்சமாக தாடி வைத்தது போல மாற்றம் காட்டியிருக்கிறார்கள்.

பெருமாள் பிச்சையின் கொலைக்கு பழிவாங்குவதற்காக ஆறுச்சாமியை அவரது மூன்று மகன்களும் கொல்கிறார்களா என்பதைவிட, மகன் கேரக்டருக்கு வைத்திருக்கும் பெயர் சிறப்பானது. ஆறுச்சாமி என்ற பெயர் முதல் பாகம் ரிலீஸானபோது வியந்து பார்க்கப்பட்டது போல, அவரது மகனுக்கு வைக்கப்பட்டிருக்கும் ‘ராம்சாமி’ என்ற பெயரும் கேள்விகளை உருவாக்கியிருக்கிறது.

இதுவரையில் தமிழக வரலாற்றில் ‘ராமசாமி’ என்றே பார்க்கப்பட்ட பெயர் இந்தப் படத்தில் ‘ராம்சாமி’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சாமி படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற விக்ரம் – த்ரிஷா ஜோடியினர் கலப்புத் திருமண தம்பதியராகக் காட்டப்பட்டிருந்தனர். ஹீரோவான விக்ரமின் சாதி பற்றிய தெளிவான அறிவிப்புகள் இல்லையென்றாலும், த்ரிஷா பிராமணப் பெண்ணாகச் சித்திரிக்கப்பட்டிருப்பார். சாதி குறித்து சர்ச்சை எழும்போது ‘நாங்க வேற… நீங்க வேற. எங்க பொண்ணை உங்களுக்கு எந்த நம்பிக்கைல தர்றது?’ என்ற கேள்வியை த்ரிஷாவின் அம்மா கேட்பார். அதற்கு விக்ரம் “உங்க பொண்ணுக்கு நல்ல புருஷனா மாத்திரம் இல்லாம உங்களுக்கு நல்ல மகனாகவும் இருப்பேன்” எனக் கூறி த்ரிஷாவைத் திருமணம் செய்திருப்பார். அதன் காரணமாக ஆறுச்சாமியின் மகனாக வரும் கேரக்டருக்கு ‘ராம்சாமி’ எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கலாம்.


Post a Comment