By April 8, 20180 CommentsReport

ஒரே நேரத்தில் இரண்டு மார்க்கெட்..!!

தீரன் அதிகாரம் ஒன்று படத்தைத் தொடர்ந்து இரு படங்களில் நடித்துவரும் கார்த்தி அடுத்ததாக தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ள புதிய படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி தற்போது ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கான பணிகள் தொடங்கியிருக்கின்றன. ‘எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் சரவணன், இயக்குநர் ஆர்.கண்ணன் ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ரஜத் ரவிசங்கர் இந்தப் படத்தை இயக்குகிறார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் ரகுல் ப்ரீத் சிங் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இருமொழிப் படத்தில் நடிக்க கார்த்தி பேச்சு வார்த்தை நடத்திவருகிறார். தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுவரும் படம் ‘நீடி நாடி ஒக்கே கதா’. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இயக்குநர் வேணு உடுகுலாவை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் பலரும் விருப்பம் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இவர் கார்த்தியை சந்தித்து தான் எழுதிவரும் கதையில் கார்த்தியின் கதாபாத்திரம் மற்றும் கதைக்களம் பற்றி விவரித்துள்ளார்.

கார்த்தி முழுக் கதையை விரிவாக எழுதிவரும்படி வேணுவிடம் கூறியுள்ளார். நீடி நாடி ஒக்கே கதா படத்தின் திரைக்கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பு கார்த்தியை மிகவும் கவர்ந்துள்ளதால் இந்தக் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழைப் போலவே தெலுங்கிலும் கார்த்திக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளதால் இரண்டு மார்க்கெட்டுகளையும் ஒரே நேரத்தில் குறிவைக்கும் விதத்திலேயே அவர் கதைகள் கேட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.


Post a Comment