By April 8, 20180 CommentsReport

படங்களை தவிர்த்த காரணம்: நிவேதா..!!

தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவந்த நிவேதா தாமஸ், சமீபகாலமாக படங்களில் நடிக்காமல் இருந்ததற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

மலையாள நடிகைகள் பலரும் தமிழில் படவாய்ப்புகள் குறையும்போது தெலுங்கு சினிமாவை நோக்கி நகர்கின்றனர். அந்த வரிசையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்துவருபவர் நிவேதா தாமஸ். இவர் போராளி படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா மற்றும் பாபநாசம் ஆகிய படங்களில் நடித்தார்.

இதில் கமல்ஹாசன் மகளாக நடித்த பாபநாசம் திரைப்படம் அவருக்கு தமிழில் பட வாய்ப்புகளைத் தராவிட்டாலும் மற்ற மொழிப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைத் தந்தது. தெலுங்கில் நானியுடன் நடித்த `ஜென்டில் மேன்’ நல்ல தொடக்கத்தைத் தந்ததால் அவருடனே `நின்னுக்கோரி’ படத்தில் ஜோடி சேர்ந்தார்.

தொடர்ந்து, ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்த லவகுசா வெற்றிப் படமாக அமைந்ததால் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் படப்பிடிப்புகளை ரத்து செய்து படிப்பில் கவனம் செலுத்திய நிவேதா தேர்வுகளை முடித்துவிட்டு கதைத் தேர்வில் ஈடுபட்டுவருகிறார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய அன்பான ரசிகர்களே! என் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை விரைவில் உங்களுக்குத் தெரிவிப்பேன். ஜெய்லவகுசா படத்திற்குப் பிறகு பட்டயப் படிப்பிற்கான தேர்வு எழுதுவதற்கு காலத்தை எடுத்துக்கொண்டேன். தேர்வு முடிவடைந்துவிட்டது. தற்போது கதைகளைப் படித்தும் கேட்டும் தேர்வு செய்துவருகிறேன். விரைவில் கேமரா முன்பு தோன்றவிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


Post a Comment