By April 8, 20180 CommentsReport

ஆடை சர்ச்சை: ரசிகருக்கு ‘பிக் பாஸ்’ சுஜா பதிலடி..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகை சுஜா வருணீ, தனது ஆடை குறித்து விமர்சித்த ரசிகர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

கேரளத்து வரவான நடிகை சுஜா வருணீ, தமிழில் பல படங்கள் நடித்தாலும் அவரைத் தமிழ் ரசிகர்களிடையே அடையாளப்படுத்தியது விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியின் இடைப்பட்ட காலத்தில் வந்து கலந்துகொண்டு குறுகிய காலமே பிக் பாஸ் வீட்டில் இருந்தாலும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். தற்போது அவருக்குச் சில படங்களில் நடிப்பதற்கான சினிமா வாய்ப்புகளும் அமைந்துள்ளன.

சமூக வலைதளங்களில் நடிகைகளை ஆபாச வார்த்தைகளால் பேசி, அவர்களைக் காயப்படுத்தி வருவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் காரணமாக நடிகைகள் பழைய அக்கவுன்ட்டுகளிலிருந்து வெளியேறி புதிதாக ஒரு பெயரில் சமூக வலைதளங்களில் இணைகின்றனர். சிலர் ரசிகர்களின் ஆபாச வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் சுஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் சிலர் ஆபாசமாக விமர்சித்திருந்தனர். இதைப் பார்த்து கோபமடைந்த சுஜா, அவர்களது பதிவுகளை புகைப்படமாக எடுத்துப் பதிவிட்டு கடுமையாகப் பதில் தந்துள்ளார்.

அதில், எல்லா பெண்களும் நல்லவர்கள் இல்லை; எல்லா ஆண்களும் கெட்டவர்கள் இல்லை என்று குறிப்பிட்டதுடன், “நான் நடிகை. எனது சாப்பாட்டை நான் பெருமையாகச் சாப்பிடுகிறேன். சினிமாவிலும், பொது நிகழ்ச்சிகளிலும் எந்த மாதிரியான உடை அணிய வேண்டும் என்பது எனது விருப்பம். இந்த ஆடை தான் உங்களுக்குப் பிரச்சினையா?. அப்படியென்றால் சிறு குழந்தைகளும் வல்லுறவு செய்யப்படுகிறார்களே ஏன்?” என ஒரு பதிவுக்குக் கேள்வி எழுப்பினார்.

அதேபோல் மற்றொரு பதிவுக்கு, “நாங்கள் பிரச்சினை இல்லை. நீங்கள் தான். உங்களது காம இச்சைதான் பிரச்சினை. இன்டர்நெட் எனும் மிகப்பெரிய உலகில் உங்களை மறைத்துக் கொள்ளலாம், யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைக்காதீர்கள். நீங்கள் கண்காணிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவீர்கள்” என எச்சரித்துள்ளார்.

சுஜாவின் இந்தப் பதிவுக்கு, ‘இந்த மாதிரியான கொடுமைகளுக்கு எதிர்த்து நின்றால்தான் தீர்வு கிடைக்கும்’ என்று பலரும் அவருக்கு ஆதரவாகக் கூறி வருகிறார்கள்.


Post a Comment