By April 9, 20180 CommentsReport

தமிழ் சினிமா: மௌனப் போராட்டத்தின் பின்னணிகளும் தீர்மானங்களும்..!!

திரைத்துறையினர் நடத்திய மௌனப் போராட்டத்தில் 4 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் திரைத்துறையினர் சார்பில் இன்று மௌன அறவழிப்போராட்டம் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்றது. இதில் கமல், ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பெப்சி உள்ளிட்ட சினிமா அமைப்பினர் பலரும் கலந்து கொண்டனர்.

போராட்ட மேடையில் பலரும் பலவிதமான கருத்துக்கள் பேசக்கூடும் என்பதால் திரையுலகம் மௌனப் போராட்டமாக நடத்தியது. கடைசி வரை யாரும் பேசவில்லை. மதியம் 1 மணியளவில் திரைத்துறையினர் நடத்திய போராட்டம் முடிந்தது.

மௌனப் போராட்டம் ஏன்?-நாசர்

போராட்டம் நிறைவடைந்ததும் இந்த மௌனப் போராட்டம் ஏன் என்பதை விளக்கினார் நாசர். “இங்கே தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், ஃபெப்சி அமைப்பு, ஒளிப்பதிவாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் அமைப்பு, சின்னத்திரை நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட ஒட்டுமொத்தத் திரையுலகமும் அழைப்பை ஏற்று வந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரது தனிப்பட்ட குரலும் மக்களின் நன்மைக்கானதே… ஆகவே, இந்தப் போராட்டத்துக்கு மௌனமே சிறந்த ஆயுதமாகக் கருதி, இங்கே கூடியுள்ள ஒட்டுமொத்தத் திரையுலகினரும் தங்களது எதிர்ப்பை மௌன அறவழி கண்டனப் போராட்டம் வாயிலாகப் பதிவு செய்தோம்” என்று பேசினார்.

4 முக்கியத் தீர்மானங்கள்

இந்த போராட்டத்தில் நான்கு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி முன்மொழிந்தார்.

1. மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு விஷயத்தையும் அரசாங்கம் அமல்படுத்தக் கூடாது.

2. காவிரி நீர் உற்பத்தியாகிற இடங்களையும், சேருகின்ற இடங்களையும் இயற்கை தீர்மானிக்கிறது. அதை சார்ந்திருக்கின்ற மக்கள் இரு மாநிலங்களிலும் இருக்கிறார்கள். அவர்களுடைய விவசாயம் மற்றும் குடிநீர் சார்ந்த வாழ்வாதாரத்தை நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம், காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழக விவசாயிகளுக்கான உரிமைகள் முறைப்படி கிடைக்க வேண்டுமென்று நாங்கள் கோருகிறோம்.

3. நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கக்கூடிய காவிரி நீர் பிரச்சினை, தமிழக மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அரசியலற்றப் பொதுநோக்குடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, அதற்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

4. கடந்த 25 வருடங்களாகப் பல அரசாங்கங்களால் கையாளப்பட்டு வருகிறது ஸ்டெர்லைட் பிரச்சினை. இப்பொழுது ஸ்டெர்லைட் நிர்வாகம் அந்த ஆலையின் உரிமத்தைப் புதுப்பிக்கவும், மேலும் விரிவாக்கவும் அனுமதி கோரி நிற்கிறது. இந்த நேரத்தில் அந்த ஆலை வெளிப்படுத்தும் நச்சுக்களால் பல்வேறு வகையில் அப்பகுதி மக்களும், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் பெரும் பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு உறுதுணையாகத் தமிழக அரசும், திரைத்துறை சார்ந்த நாங்களும் போராடி வருகிறோம். மத்திய அரசு இதற்கு செவிசாய்த்து, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டுமென வலியுறுத்துகிறோம்.

மேலும், இவ்வளவு காலம் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையால், மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கும் பாதிப்புகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை தமிழக திரைத்துறை சார்பாக வலியுறுத்துகிறோம்.

அதனைத் தொடர்ந்து மக்களுக்கான அரசு என்றால் மக்களின் உணர்வுகளை மதியுங்கள் என திரையுலகினர் முழக்கமிட்டனர். அதன்பின் பேசிய விஷால், ‘விவசாயம் வாழவேண்டும், விவசாயி வாழ வேண்டும்’ என்று கூறினார்.

தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் நில்லுங்கள்

இதற்கிடையே திடீரென்று நடிகர் சத்யராஜ் எழுந்து மைக்கை வாங்கி பேசத் தொடங்கினார். “நான் எப்போதும் தமிழர்கள் பக்கம், தமிழ் உணர்வின் பக்கம்தான் இருக்கிறேன். எதைப்பற்றியும் எனக்கு கவலை இல்லை. எந்த அரசாக இருந்தாலும் அஞ்சமாட்டேன். ராணுவமே வந்தாலும் கவலைப்பட மாட்டேன். தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் நில்லுங்கள். தமிழர்களுக்காக குரல் கொடுக்காதவர்கள், தமிழ் உணர்வு இல்லாதவர்கள் ஓடி விடுங்கள். இயற்கை அன்னை கொடுத்த வளத்தை அரசியலாக்கி கெடுக்க வேண்டாம்” என்றார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*