By April 9, 20180 CommentsReport

காவிரி விவகாரம்: உளறிய சிம்பு..!!

காவிரி மேலாண்மை அமைக்க போராட்டம் நடத்தும் அனைத்து கட்சிகளும், அரசியல் மட்டும்தான் செய்கிறார்கள் என்று நடிகர் சிம்பு ஆவேசமாக கூறியிருக்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் மௌனப் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரைத்துறையைச் சார்ந்த பலரும் கலந்து கொண்டனர். ஆனால், நடிகர் சிம்பு கலந்து கொள்ளவில்லை.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து தி.நகரில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சிம்பு விளக்கியிருக்கிறார்.

“காவிரி மேலாண்மை அமைப்பதற்கும், ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கும் நடிகர் சங்கம் சார்பில் இன்று நடைபெற்ற போராட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை. திரைத்துறையில் பல பிரச்சினைகள் இருக்கும்போது, பிற போராட்டங்களில் பங்கேற்பதில் எனக்கு உடன்பாடில்லை.

ரொம்ப நாளாகத் தமிழ்நாட்டிற்கு ஏதாவது ஒரு பிரச்சினை வந்து கொண்டிருக்கிறது. அது என்ன என்று பார்த்தால், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு சூனியம் வைத்தது போல் உள்ளது. அவர்களுக்கு என்ன நடந்தது என்று ஆண்டவனுக்குத்தான் தெரியும். அதை முறையாக கண்டுபிடிக்க வேண்டும்.

காவிரி போராட்டத்திற்கு நாம் நேரடியாக மக்களிடம் சென்று தண்ணீர் கேட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும். நாம் கேட்டால் கர்நாடக மக்கள் தண்ணீர் கொடுப்பார்கள். இங்கு போராட்டம் நடத்துகிற அரசியல்வாதிகள் யாருக்கும் மக்களுக்கு நீர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. அவர்கள் எல்லோரும் அரசியல் செய்கிறார்கள். இதை அரசியலாக்கி ஓட்டாக்க நினைக்கிறார்கள்” என்றார்.

நடிகர் சங்க போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “சிஎஸ்கே வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்துகொண்டு விளையாட வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதைக் கிண்டல் செய்யும் விதமாக பேசிய சிம்பு, “ஐபிஎல் போட்டி நடந்தால் கறுப்பு சட்டை அணிந்துகொண்டு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என அப்துல்கலாம் சொன்னார். இல்லை இல்லை.. தியானம் செய்யும்போது ஆன்மா சொன்னது” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், “காவிரிக்காக ஐபிஎல் போட்டியை தடை செய்ய கூடாது. கிரிக்கெட் விளையாடுவது சென்னை மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்குகிறது.

சென்னை அணியின் கேப்டனாக இருக்கும் மகேந்திர சிங் டோனி, தமிழக மக்களை நேசிக்கக் கூடியவர். காவிரி பிரச்சினையை அவர் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கு அவர் ஏதாவது ஒரு வகையில் ஆதரவு அளிக்க வேண்டும். போட்டியைப் பார்ப்பதற்கு எங்களை முதலில் அனுமதியுங்கள். பின்னர் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

காவிரி விவகாரம் குறித்து பேசிய சிம்பு தனது கருத்தை தெளிவாக வெளிப்படுத்தாமல் மாற்றி மாற்றி பேசியபடி உளறினார். இதனால் அவருடைய பேச்சை நேரலை செய்த பல சேனல்கள் ஒளிபரப்பை நிறுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*