By April 10, 20180 CommentsReport

ஸ்ரீ லீக்ஸ்: நடிகர் சங்கம் எடுத்த முடிவு..!!

ஸ்ரீ ரெட்டியுடன் எங்கள் சங்கத்தைச் சேர்ந்த எந்தக் கலைஞரும் இனி நடிக்க மாட்டார்கள் என தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கத் தலைவர் சிவாஜி ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் சுசி லீக்ஸ் என்ற பெயரில் வெளியாகி கோலிவுட்டை அதிரவைத்ததைப் போல, தெலுங்கு சினிமாவுலகிலும் புதிதாகக் கிளம்பியுள்ள ஸ்ரீ லீக்ஸ் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.

தெலுங்கில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுக்கும் பிரபலங்களின் பெயர்களை ஸ்ரீ லீக்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடுவதாக பரபரப்பை ஏற்படுத்தினார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.

இந்தப் பதிவுக்கு எதிர்ப்புகள் வலுத்தபோதும், தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவைப் பற்றி வெளியிட்டார். இதன் காரணமாக சேகர் கம்முலாவுக்கும் ஸ்ரீரெட்டிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. இவரைத் தொடர்ந்து புதிதாக ஒரு தெலுங்கு நடிகர் பற்றியும் வெளியிட்டார். இவரது இந்தக் கருத்துக்கு தெலுங்குத் திரையுலகமும் நடிகர், நடிகைகளும் மறுப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து இவர் தெலுங்கு சினிமாவுலகில் நடிப்பதற்கான உரிமத்தினை தெலுங்குத் திரையுலகம் ரத்து செய்தது.

தெலுங்கு திரைப்படத் துறையின் இந்த முடிவினை எதிர்த்தும், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக் கோரியும் ஹைதராபாத் பிலிம் நகரில் உள்ள மூவி ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் எதிரில் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டார் ஸ்ரீரெட்டி. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரது போராட்டத்தைத் தடுத்துநிறுத்தினர். இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் மேலும் சர்ச்சையாக வெடித்தது.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளரிடம் பேசியுள்ள தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கத் தலைவர் சிவாஜி ராஜா, “ஸ்ரீ ரெட்டியின் செயல் எங்கள் மனதை புண்படுத்தியுள்ளது. அவர் கூறும் குற்றச்சாட்டுகளில் ஒன்றுகூட உண்மையில்லை. அவர் போராட்டம் நடத்துவதற்கு என்னை சந்தித்தார். நான் அவருக்கு உரிய உதவிகள் செய்வதாகக் கூறினேன். ஆனால் ஊடகங்களில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக ஸ்ரீ ரெட்டி கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது நாங்கள் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அவரின் அங்கீகார அட்டையை ரத்து செய்துள்ளோம். அவருடன் எங்கள் சங்கத்தைச் சேர்ந்த எந்தக் கலைஞரும் இனி நடிக்க மாட்டார்கள். அவ்வாறு நடித்தால் அவர்களும் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாகப் பேசிய இயக்குநர் தேஜா, “நாங்கள் சங்கத்தின் கட்டுப்பாடுகளை மதிக்கிறோம். உறுப்பினர் அட்டை பெறுவதென்பது நீண்ட காலப் பணியாகும். அதற்காக நாங்கள் இரவு பகலாகப் பணியாற்றிவருகிறோம். அத்துடன் பல்வேறு குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுத்துவருகிறோம். ஸ்ரீ ரெட்டியின் செயலால் தற்போது ஊடகங்களுக்கு பதிலளிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். ஸ்ரீ ரெட்டி கூறுவதில் உண்மை இல்லை” என்றார்.

ஸ்ரீ ரெட்டியின் செயல்பாடுகளைப் பற்றிக் கூறும்போது, “அவர் இப்படி செய்வதின் மூலம் எங்களை மிரட்ட முடியாது. அவர் சங்க விதிகளைப் பின்பற்றியிருக்க வேண்டும். நாங்கள் பெண்களை மிகவும் மதிப்பவர்கள். எங்கள் சங்கத்தின் பெண் உறுப்பினர்களிடம் கேட்டால் உண்மை தெரியும். ஸ்ரீ ரெட்டி உறுப்பினர் உரிமத்தை ரத்து செய்தபோது, அவருக்காக நாங்கள் விண்ணப்பங்களை வழங்கினோம். ஆனால் அவர்தான் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. அவர் விண்ணப்பத்திற்காக கட்டணத்தை மட்டுமே வழங்கினார். உறுப்பினர் சேர்க்கைக்கான கட்டணத்தை வழங்கவில்லை. இது தொடர்பாக அவரிடம் கேட்டபோதுதான், அவர் எங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்” என்று விவரித்துள்ளார்


Post a Comment