By April 11, 20180 CommentsReport

மாளவிகாவுக்கு ஊக்கமளிக்கும் இருவர்..!!

மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி நான்கு படங்கள் நடித்துள்ள மாளவிகா மோகனன் கேரளாவில் கீழ்த்தரமான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

ஆஸ்கர் விருது பெற்ற ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன் . இவர் கேரளாவைப் பூர்விகமாகக் கொண்டவர் என்றாலும் பிறந்து வளர்ந்தது மும்பை நகரில் என்பதால் பாலிவுட் மேல் மிகுந்த ஈர்ப்புடன் உள்ளார். “நான் இப்போது பாலிவுட்டிலே கவனம் செலுத்தவுள்ளேன். எனது முழு ஆற்றலையும் இங்கு செலவிடுவேன். தென்னிந்திய நடிகையாக வரவேண்டும் என்று நான் விரும்பவில்லை. சிறு வயதில் இருந்தே இந்திப் படங்களோடு இணைந்துள்ளேன்” என்று மாளவிகா டெக்கான் கிரானிக்கிளுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சமூக வலைதள விமர்சனங்கள் குறித்து மாளவிகா கருத்து தெரிவித்துள்ளார். “இந்த விமர்சனங்கள் கொடூரமாக உள்ளன. அதிலும் கேரளாவில் அதிகமாக உள்ளது. பாலிவுட்டில் மகிழ்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுவது கேரளாவில் அடுத்த கட்டத்திற்குச் செல்கிறது. பார்வதி விஷயத்தில் காரணமே இல்லாமல் விமர்சனங்கள் வைக்கப்படுவதைப் பார்க்கிறேன். இது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகவே உள்ளது” என்று மாளவிகா கூறியுள்ளார்.

திரையுலகப் பின்புலம் இல்லாமல் வந்த தீபிகா தனக்கு ஊக்கம் அளிப்பவராக இருப்பதாக மாளவிகா கூறியுள்ளார். “எனது தந்தை திரைத் துறையில் பணியாற்றியிருந்தாலும் அவர் இயக்குநர் அல்ல. அவர் திரைத் துறையில் பணியாற்றியிருப்பதால் எனக்கு ஒரு பட வாய்ப்பும் வந்ததில்லை. பிரியங்கா சோப்ராவும் தீபிகா படுகோனும் எனக்கு ஊக்க சக்தியாக இருக்கின்றனர்” என அவர் கூறியுள்ளார்.

பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் நடிக்கும்போது இயக்குநருக்கும் தனக்கும் முதலில் மொழி ஒரு தடையாக இருந்தது எனக் கூறிய மாளவிகா, பின் அதை எளிதாக சமாளித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் படம் ஏப்ரல் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.


Post a Comment