By April 13, 20180 CommentsReport

கர்ணனாக மாறும் விக்ரம்..!!

விக்ரம் கர்ணன் வேடம் ஏற்று நடிக்கும் மகாவீர் கர்ணா திரைப்படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகவுள்ளது.

என்னு நிண்டே மொய்தீன் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார். இவர் சபரிமலை சென்று படத்தின் திரைக்கதையை சந்நிதியில் வைத்து வணங்கிவந்துள்ளார்.

மகாபாரதத்தின் மையக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச கவனத்தைப் பெறும் வகையில் இப்படம் தயாராக உள்ளது. இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் ஹைதராபாத் ராமோஜி ஸ்டுடியோவில் தொடங்கவுள்ளது. முக்கியக் காட்சிகளின் படப்பிடிப்புகள் ஹைதராபாத் மற்றும் ஜோத்பூரில் நடைபெறவுள்ளன.

கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் தனது உடலை மாற்றுவது விக்ரமுக்குப் புதிதல்ல. இந்தப் படத்திலும் போர் வீரனாகத் தனது உடலை மாற்றிவருகிறார். படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளுக்காக வெளிநாட்டு சண்டைக் கலைஞர்களிடம் பயிற்சி பெறவுள்ளார்.

ஆரம்பத்தில் மலையாளத்தில் மட்டும் இந்தப் படத்தைத் தயாரிக்க படக்குழு திட்டமிட்டது. ஆனால் இந்தி, தமிழ் மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கவும் மற்ற மொழி நடிகர்களை நடிக்கவைக்கவும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. விமல் தற்போது நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்களைத் தேர்வு செய்துவருகிறார். வரும் அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்கி அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.


Post a Comment