By April 13, 20180 CommentsReport

அநீதிக்கு எதிராக களமிறங்கும் வரலட்சுமி..!!

வெல்வெட் நகரம் திரைப்படத்தில் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்கான ஆதாரத்தைத் தேடி அலையும் பத்திரிகையாளராக நடித்துவருகிறார் நடிகை வரலட்சுமி.

சண்டக்கோழி-2, எச்சரிக்கை, கன்னிராசி, விஜய்-62, மிஸ்டர் சந்திரமௌலி, நீயா-2 என அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வரலட்சுமி தற்போது ‘வெல்வெட் நகரம்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். அறிமுக இயக்குநர் மனோஜ் கே.நடராஜன் இயக்கும் இந்தப் படம் கதாநாயகியை மையப்படுத்திய சைக்கலாஜிக்கல் ஆக்‌ஷன் திரில்லராக உருவாகிறது. எட்டு வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வரலட்சுமி உஷா என்ற பெயரில் பத்திரிகையாளராக நடிக்கிறார்.

மேக்கர்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் இப்படத்தில் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜய், பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ‘அருவி’ படத்தின் படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா படத்தொகுப்பு செய்கிறார். இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் மனோஜ் கே.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெல்வெட் நகரம் கதாநாயகியை மையப்படுத்திய சைக்கலாஜிக்கல் ஆக்‌ஷன் திரில்லராக உருவாகிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஃபீமேல் சென்ட்ரிக் திரைப்படம் இது. இதன் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் மதுரையில் களப்பணியாற்றும் பத்திரிகையாளராக வரலட்சுமி நடித்திருக்கிறார். கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்கான ஆதாரத்தைத் தேடியும், அதன் முழு பின்னணியையும் பற்றித் துப்பறிவதற்காகவும் மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார் வரலட்சுமி. இங்கு அவர் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களை விறுவிறுப்பான ஆக்‌ஷன் கலந்து சொல்லும் படமாக ‘வெல்வெட் நகரம்’ தயாராகி வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றுவந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் காரணமாக தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*