By April 12, 20180 CommentsReport

மம்மூட்டி படத்தில் சூர்யா?..!!

மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக வலம்வரும் தகவலில் உண்மையில்லை என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒய்.எஸ்.ஆரின் வாழ்க்கை வரலாறு ‘யாத்ரா’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகிவருகிறது. ஆந்திராவில் மக்கள் செல்வாக்குள்ள அரசியல்வாதியாக உருவெடுத்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் கட்சியின் சார்பாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆட்சியில் இருக்கும்போது விமான விபத்தில் 2009ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

தற்போது உருவாகிவரும் இந்தப் படத்தில், 1999 முதல் 2004ஆம் ஆண்டு காலத்தில் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் அதிகளவில் கவனம் செலுத்தப்படவுள்ளன. அதிலும் குறிப்பாக அவரது வெற்றிக்குக் காரணமாக இருந்த மூன்று மாத கால நடை பயணம் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பின் மம்மூட்டி இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் களமிறங்கவுள்ளார். இதில் ஒய்.எஸ்.ஆரின் மகன் ஜெகன் வேடத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், இதில் உண்மை இல்லை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே போல் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரியதர்ஷன் இயக்கத்தில் சூர்யா, மம்மூட்டி இணைந்து நடிப்பதாகத் தகவல் வெளியாகி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தில் ஒப்பந்தமாகி நடித்துவருகிறார். இதைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*