By April 21, 20180 CommentsReport

குயின் ரீமேக்: விலகினாரா தமன்னா..!!

குயின் படத்தின் தெலுங்கு ரீமேக் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது.

இந்தியில் கங்கணா ரணாவத் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் ‘குயின்’. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்தை முதலில் ரேவதி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அவருக்குப் பதில் தமிழ், கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த்தும் தெலுங்கு, மலையாளத்தை நீலகண்டாவும் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பாரூல் யாதவ் ஆகியோர் நடித்துவருகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கு இயக்குநர் நீலகண்டா கதையில் சில மாற்றங்களைச் செய்திருந்தார். இதற்கு தமன்னா ஒப்புக்கொள்ளாததால் கருத்து வேறுபாடு காரணமாக படத்திலிருந்து நீலகண்டா விலகினார். இதையடுத்து தமிழ், கன்னடத்துடன் தெலுங்கையும் இயக்கும் பொறுப்பு ரமேஷ் அரவிந்த்துக்கு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது தெலுங்குப் பதிப்பு நின்றுவிட்டதாகவும் அந்தப் படத்திலிருந்து தமன்னா விலகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள படக்குழு, “தமிழ், கன்னடப் படங்களை முடித்துவிட்டு ரமேஷ் அரவிந்த் தெலுங்குப் பதிப்பைத் தொடங்கவுள்ளார். தமன்னாவும் படத்திலிருந்து விலகவில்லை. ஆனால், படப்பிடிப்பு தள்ளிப்போகிறது” என்று விளக்கம் அளித்துள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*