By April 24, 20180 CommentsReport

விஷாலுக்குத் தெரியாமல் அவர் படம் ரிலீஸ்..!!

இரும்புத்திரை படத்தின் தவறான வெளியீட்டுத் தேதியை ஊடகங்கள் பரப்புரை செய்ய வேண்டாம் என விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஷால், சமந்தா நடிப்பில் புதுமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கும் படம் இரும்புத்திரை. இந்தப் படத்தின் டீசர் மற்றும் இசை வெளியானதை அடுத்து கடந்த பொங்கல் தின ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யவிருப்பதாக அறிவித்தனர். அது முடியாமல்போகவே குடியரசு தினத்தன்று வெளியாகும் என்று அறிவித்தனர். அதுவும் சாத்தியமாகவில்லை.

இதற்கிடையே தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தப் போராட்டத்தால் புதிய படங்கள் வெளியாவது நிறுத்திவைக்கப்பட்டது. ஒருவழியாக போராட்டம் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் புதிய படங்கள் வெளியாகின்றன. நிறுத்திவைக்கப்பட்ட படங்களுக்கும் புதிய வெளியீட்டு தேதியை குறித்துக் கொடுக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில் இரும்புத்திரை படம் மே 11ஆம் தேதி வெளியாக உள்ளதாக புது போஸ்டர்கள் வெளியாகின. இதனை ஊடகங்களும் நம்பி அந்தத் தேதியை குறிப்பிட்டு தகவல் பரப்பிவருகின்றன.

இந்தச் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஊடகங்கள் இரும்புத்திரை படம் மே 11இல் வெளியாவதாக தவறாக பரப்பிவருகின்றன. இது ரிலீஸ் தேதி இல்லை. சில விநியோகஸ்தர்களின் கருத்து வேறுபாடு காரணமாகவும் சில கருத்து மோதல்களாலும் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதலுக்குப் பிறகு இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். அதுவரை எங்களுடைய அதிகாரபூர்வ அறிவிப்பின்றி ஊடகங்கள் இந்தத் தவறான ரிலீஸ் தேதியை பரப்ப வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*