By April 24, 20180 CommentsReport

தோல்வி குறித்து பேச மறுக்கும் ரகுல்..!!

நான் நடிக்கும் படங்கள் தோல்வியடைந்தால் அது குறித்து என்னிடம் விளக்கம் கேட்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

தமிழில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று வெற்றி பெற்றதால் தொடர்ச்சியாகப் பட வாய்ப்புகள் அமைந்தன. இதன் காரணமாக சூர்யாவின் என்ஜிகே படத்தின் நாயகியாகியுள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தைத் தொடர்ந்து மீண்டும் கார்த்தியுடன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். ஆனால் இதுவரை தெலுங்கில் அவருக்குத் திருப்புமுனை படமாக எதுவும் அமையவில்லை. இதனால் முன்னணி கதாநாயகி இடத்தைப் பிடிக்க முடியாமல் இருக்கிறார் என்று டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு ரகுல் ப்ரீத் சிங் அளித்துள்ள பேட்டியில், “ஒவ்வொரு முறையும் நான் நடித்த படம் ஓடவில்லை என்றால் அதற்கான காரணம் குறித்து என்னிடம் கேட்கிறார்கள். அப்படி என்னிடம் கேட்காதீர்கள்; எனக்கு அது பிடிக்கவில்லை. படம் ஓடுவதும் தோல்வியை சந்திப்பதும் என் கைகளில் இல்லை. நான் ஒன்றும் படத்தை தயாரிக்கவில்லை. ஒவ்வொரு படத்தையும் எல்லாரும் இணைந்து கஷ்டப்பட்டு எடுக்கிறோம். அதில் ஒவ்வொருவரின் உழைப்பும் இருக்கிறது. ஆனாலும் சில படங்கள் தோல்வி அடைகின்றன. சில படங்கள் வெற்றி பெறுகின்றன. முதலில் எடுக்கும் படங்கள் எல்லாமுமே வெற்றி பெறாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியில் சித்தார்த் மல்கோத்ராவோடு இணைந்து நடித்த அய்யாரி படத்தைப் பற்றி தெரிவித்த அவர், “என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான படம் இது. நீராஜ் சாருடன் பணிபுரிய வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பியதுண்டு. இந்தப் படத்தில் நாங்கள் அனைவரும் கடினமாக உழைத்தோம், ஆனால் அது பாராட்டப்பட்டதா இல்லையா என்பது நம் கைகளில் இல்லை.

நான் ஒவ்வொரு படத்திற்கும் என் 100% உழைப்பைக் கொடுக்கிறேன். நன்றாக ஓடும் என்று எதிர்பார்க்கிற படங்கள் தோல்வி அடைவதும், ஓடாது என்று நினைக்கிற படங்கள் வெற்றி பெறுவதும் இயல்பு. அதே போல் வெற்றி தோல்வியை ரசிகர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்கள் எப்படிப்பட்ட படங்களை விரும்புகிறார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதற்காக, தோல்விப் படம் கொடுத்த இயக்குநர்களையும் நடிகர் நடிகைகளையும் ஒதுக்குவது தவறு” என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்


Post a Comment

CAPTCHA
Refresh

*