By April 26, 20180 CommentsReport

வில்லிசையில் ராப் இசைக்கும் தமிழச்சி..!! (வீடியோ)

எந்திரன் படத்தில் ரோபோ ரஜினிக்குக் காதல் வந்ததும், வரும் ‘இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ…’ பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் மட்டுமல்ல; ரஜினி ரசிகர்களும் கொண்டாடித்தீர்க்கும் பாடல். ரஜினிக்கு ரஹ்மான் குரல் கொடுக்க ஐஸ்வர்யா ராய்க்குத் தனது மந்திரக் குரலைக் கொடுத்தவர் லேடி காஷ். “காதல் செய்யும் ரோபோ… நீ தேவை இல்லை போ போ…” என்றவர் தற்போது தமிழின் நாட்டார் இசை வடிவமான வில்லிசையையும் ராப் இசையையும் இணைத்து ‘வில்லுப்பாட்டு’ என்ற புதிய வீடியோ ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.

லேடி காஷ், கென் ராய்சன் இணைந்து இயக்கியுள்ள இந்த வீடியோவுக்கு கெவின் டார்வின் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரிகளை எழுதி லேடி காஷ் பாடியுள்ளார். பாடல் குறித்தும் அது உருவான விதம் குறித்தும் அவருடன் உரையாடினோம்.

உங்களது பின்னணி?

நான் சிங்கப்பூர் தமிழ்ப் பெண். விடுமுறைக்குக் குடும்பத்தோடு இந்தியா வருவோம். எங்களது பூர்வீகம் தஞ்சாவூர். கலை மற்றும் மொழிகளில் பள்ளிக்காலம் முதல் ஈடுபாடு உண்டு. எனக்குத் தமிழ் மேல் எப்போதும் பற்று உண்டு. தொடர்புக்காக ஆங்கிலம் அதிகம் பேச வேண்டியுள்ளது. தமிழ், ஆங்கிலம் இரண்டும் எனது இரு கண்கள். அதனால்தான் இரண்டையும் சேர்த்தே எனது படைப்புகளை உருவாக்குகிறேன்.

திரைத் துறையில் நிறைய பாடல்கள் பாடியுள்ளேன். இருப்பினும் சமீபகாலமாக என் கவனம் என்னுடைய சொந்த இசையில் பாடுவதிலேயே உள்ளது. சென்னையில் மூன்று வருடங்கள் ரெக்கார்டிங் ஆர்ட்ஸ் படித்ததால் திரைத் துறை பற்றி அறிந்துகொள்ள, தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பாக இருந்தது. பதினோரு ஆண்டுகளாக ராப் இசையில் பாடிக் கொண்டிருக்கிறேன். இது எனது இரண்டாவது பாடல். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் இந்தப் பாடலைப் பாடியுள்ளேன். இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே இதற்கான யோசனை இருந்தது. கன்னியாகுமரிக்குச் சென்று அங்குள்ள கலைஞர்களைச் சந்தித்து இதைச் சரியாகச் செய்ய வேண்டும் என முடிவெடுத்திருந்தேன். அது இப்போது சாத்தியமாகியுள்ளது.

ராப் இசை என்பது கறுப்பின மக்களின் கலை வடிவம்; வில்லிசை என்பது தமிழ் நாட்டார் இசையில் வருவது; குறிப்பாகக் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தது. இந்த இரு இசைக்கும் உள்ள ஒற்றுமை என்ன? எந்த விதத்தில் இதை இணைக்கிறீர்கள்?

டிவியில் பார்க்கும்போது அதிகமாக அமெரிக்க இசை வடிவங்கள் இடம்பெறுகின்றன; ராப் இசை வருகிறது. ஆனால், வில்லிசை உள்ளிட்ட நமது பாரம்பரிய இசை வடிவங்கள் எதுவும் சர்வதேசத் தொலைக்காட்சி சேனல்களில் இடம்பெறுவதில்லை. நமது இசையை அங்கு கொண்டு செல்வதற்கான ஒரு முயற்சியாக இதைப் பார்க்கிறேன். மற்றொன்று இரண்டுமே கதை சொல்வதற்கான இசை வடிவங்கள். ராப் இசைக்கு நமது வில்லிசையும் ஒரு விதை என்பது எனது கருத்து.

மியூசிக் வீடியோவுக்கான உங்கள் பயணம் பற்றிக் கூறுங்கள்

இதன் கரு என் மனதில் பல வருடங்களாகவே இருக்கிறது. இந்தப் பாடலை இரு வருடங்களுக்கு முன்பு நான் எழுதி முடித்தேன். இது ஒரு காதல் பாடலோ அல்லது பொழுதுபோக்குப் பாடலோ அல்ல. இதற்குச் சில ஆய்வுகள் தேவைப்பட்டன. மிகக் கவனமாக இந்த வரிகளை எழுதி முடித்தேன். இதற்காகக் கடந்த இரு மாதங்களாகப் பேராசிரியர்களைச் சந்தித்துத் தகவல்கள் சேகரித்து மியூசிக் வீடியோவாக மட்டுமல்லாமல் ஆவணப்படம் போன்று இதைப் படமாக்கினோம்.

பூங்கனி அம்மா யார்? அவருக்கும் உங்களுக்குமான தொடர்பு பற்றிக் கூறுங்கள்…

பூங்கனி அம்மா 82 வயதான வில்லிசைக் கலைஞர். இவர்தான் மிக மூத்த பெண் வில்லிசைக் கலைஞர். சிறு வயதில் இருந்தே இந்தக் கலைக்காக இயங்கிக்கொண்டிருக்கும் பூங்கனி அம்மாவிடம் ரெக்கார்ட்ஸ் இல்லாததால் அரசு சார்பில் எந்தச் சலுகைகளும் அங்கீகாரங்களும் அவருக்குக் கிடைக்கவில்லை. கன்னியாகுமரியில் ஒரு குடிசையில் ஏழ்மையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த மியூசிக் வீடியோவில் அவர்களை ஆவணப்படுத்தியுள்ளோம். தொண்டைக் கட்டியிருந்ததால் அவரால் பாட முடியவில்லை. இருப்பினும் எங்களுக்காக ஒரு பதினைந்து நிமிடம் மிகுந்த உற்சாகத்துடன் வில்லிசையில் பாடிக் காண்பித்தார். இந்த ஆல்பத்தின் மூலம் ஏதேனும் அங்கீகாரம் அவருக்குக் கிடைக்க வேண்டும் என விரும்புகிறோம்.

வேர்களை மறந்துவிடாதீர்கள் என்ற உங்களது இந்த முழக்கத்தை அடுத்தடுத்த பாடல்களிலும் எதிர்பார்க்கலாமா?

எல்லாப் பாடல்களும் இதே பாணியில் இருக்கும் என்று கூறிவிட முடியாது. இந்தப் பாடல் எனது பல வருடக் கனவு. அது தற்போது நனவாகியுள்ளது. அடுத்த பாடல் முழுக்க மகிழ்ச்சியான ஒரு கருவைக் கொண்டதாகக்கூட இருக்கலாம். தமிழ்மொழியின் முக்கியமான கலை வடிவத்தைப் பற்றி பாடல்கள் வரும்போது அதை மக்கள் உணர்வுபூர்வமாகப் பாராட்டுகிறார்கள். அதை ஊக்குவிக்கிறார்கள். ஆனால், ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. தமிழ் மொழியை வெளி உலகுக்குக் கொண்டு செல்ல ஆங்கிலமும் அவசியமாக உள்ளது. எனது பாடல்களில் இரண்டையும் சேர்ப்பதும் அதற்காகத்தான். கடல் கடந்து உள்ளவர்களுக்குத் தமிழ் மொழி பற்றி, அதன் பழைமையான கலை வடிவங்கள் பற்றிச் சொல்ல வேண்டுமானால் ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும்.\


Post a Comment

CAPTCHA
Refresh

*