By April 26, 20180 CommentsReport

ரஜினிக்கு வில்லன் விஜய் சேதுபதி..!!

தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று அதைக் குறிப்பிடலாம். நடிகர்கள் அனைவரும் நடிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர். ஆனாலும், அவர்களில் பலரும் ஒரே ஃப்ரேமில் எதிரெதிரே நின்று நடிக்கத் தயங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதாவை பார்த்து மட்டும்தான். இதில் சிவாஜி மட்டும் விதிவிலக்கு. எதிரே நிற்கும் நடிகரை மொத்தமாக காலி செய்து, முழு கவனத்தையும் தன் பக்கம் திருப்பி ஹீரோயிசத்தைக் கேள்விக்குறியாக்கிய எம்.ஆர்.ராதாவின் தனித்தன்மையுடன் அதிகம் பேர் சினிமாவில் உருவாகவில்லை. இப்போது அந்த இடத்துக்கு மெல்ல மெல்ல வந்துகொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. அதை நிரூபிக்கும் விதத்தில் இதோ ரஜினியின் அடுத்த திரைப்படத்தில் அவருக்கு எதிரான கேரக்டரில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார் ரஜினி. இந்தப் படத்தில் நடிப்பவர்கள் பற்றிய தகவல்களைச் சீரான இடைவெளியில் வெளியிட்டு, இப்படம் பற்றி மக்கள் மறக்காத விதத்தில் டிரெண்டிங்கில் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ரஜினிக்கு எதிராக விஜய் சேதுபதி நடிக்கும் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.

ரஜினி படத்தில் நடிப்பது விஜய் சேதுபதிக்கு சிறப்பு என்பதைவிடவும், இதில் விஜய் சேதுபதிக்கான பாத்திரம் எந்த வகையில் இருக்கும் என்பதே முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. மேலே குறிப்பிட்டது போல, நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்குப் பிறகு ரகுவரன் என்ற ஒற்றை மனிதர் மட்டுமே வில்லன், குணச்சித்திர வேடம், ஹீரோயிசத்தைப் பகடி செய்வது என எந்த மைதானத்தில் இறக்கிவிட்டாலும் சிக்சர் அடிப்பார். அவருக்குப் பிறகு அந்த இடம் காலியாகவே இருந்தது.

ரஜினியின் சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க பிரகாஷ் ராஜ் முதலில் பேசப்பட்டார். ஆனால், அதிக சம்பளம் கேட்டதால் கைவிடப்பட்டார். ரஜினியின் படம், படத்தின் பட்ஜெட், அந்த பட்ஜெட் உருவாக்கும் பிரம்மாண்டம், அதனால் ஆகப்போகும் வியாபாரம், வியாபாரம் கொடுக்கப்போகும் வசூல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பிரகாஷ் ராஜ் அதிகபட்ச விலையைக் கேட்டார். ஆனால், ரஜினி என்ற இமாலய இமேஜை வைத்து, மற்றவர்களிடம் புரமோஷன் என்ற விலையைப் பேசி சுலபமாகப் படத்தில் சேர்ப்பது தொடர்கதையாக இருந்துவந்ததால் சுமன் அந்த கேரக்டருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நல்ல பெயரையும் பெற்றார்.

அந்த வகையில் விஜய் சேதுபதிக்கு இந்தப் படம் சம்பளத்தை வாங்கித் தருவதுடன் புகழையும் சேர்த்து வாங்கித் தரப்போவது உறுதி. ரஜினியின் ரசிகராகத் திரைத் துறையில் நுழைந்த விஜய் சேதுபதி இன்று அவருடன் நடிக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு அதிர்ஷ்டத்தை எந்த வகையிலும் காரணம் சொல்லமுடியாது. ஹீரோ என்ற கயிறைப் பிடித்துக்கொண்டே எம்.ஆர்.ராதா, ரகுவரன் ஆகியோர் விட்டுச்சென்ற இடத்தை விஜய் சேதுபதி கைப்பற்றத் தொடங்கியிருக்கிறார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் தேவையான விதத்தில் தன்னை நெளித்து வளைத்து, பாத்திரத்தில் ஊற்றப்பட்ட நீர் போலத் தன்னைப் பொருத்திக்கொள்ளும் விஜய் சேதுபதி ரஜினியுடன் நடிக்கும்போது என்ன நடக்கப்போகிறது என்பதைக் காத்திருந்து பார்க்க வேண்டும்


Post a Comment

CAPTCHA
Refresh

*